முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப்புக்கு ஆக உயரிய குடிமை விருது

முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப்புக்கு ஆக உயரிய குடிமை விருது

2 mins read
மறைந்த நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளர் ஆ. பழனியப்பனுக்கு பொதுச் சேவை நட்சத்திர விருது
07f4ad17-b170-4f9b-a5ac-abfc87959208
அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் இருந்து ஆக உயரிய குடிமை விருதைப் பெறும் முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப்புக்கு சிங்கப்பூரின் உயரிய குடிமை விருது வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்திய கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்வாண்டிற்கான தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் இருந்து இவர் ‘ஆர்டர் ஆஃப் தெமாசெக்’ விருதைப் பெற்றார்.

1978ஆம் ஆண்டில் தொழிலாளர் இயக்கத்தில் தன் பயணத்தைத் தொடங்கிய இவர், தேசிய தொழிற்சங்க காங்கிரசின் துணை பொதுச் செயலாளராக பதவி உயர்வு பெற்றார். 

அவர் தமது 33 ஆண்டுகால அர்ப்பணிப்பு சேவையில் உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் தொழிலாளர் தரங்களை ஏற்படுத்தி, அவற்றை வலுப்படுத்துவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் விரிவான பங்களிப்பை வழங்கினார் என்றும் அவருடைய தகுதியுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அனைத்துலக தொழிலாளர் இயக்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சிங்கப்பூரர், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலாய் பெண், முதல் பெண் நாடாளுமன்ற நாயகர், முதல் பெண் அதிபர் போன்ற பல பெருமைகளை இவர் தன் வாழ்நாளில் சாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாண்டு பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம், நீண்டகாலச் சேவைப் பதக்கம் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 6,598 பேர் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளனர்.

அவர்களுள், அண்மையில் மறைந்த சிங்கப்பூர் நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளரும் சமூக சேவையாளருமான ஆ.பழனியப்பனும் ஒருவர். 

முப்பது ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் பணிபுரிந்த அவர், பல்வேறு மொழிசார் படைப்புகளையும் மொழிபெயர்ப்புப் பணிகளையும் செய்துள்ளார்.

வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் வெளிவந்த ‘சொல்வளக் கையேடு’ எனும் மொழிசார் படைப்பு, ஆங்கில சொற்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்புகளை பகிர ‘சிங்கை டிரான்ஸ்லேட் கம்யூனிட்டி’ எனும் ஃபேஸ்புக் பக்கம் போன்ற பல முயற்சிகளை அவர் முன்னெடுத்தார். 

அவரின் சார்பாக விருதினை பெற்ற அவருடைய மகள் திருவாட்டி பத்மா பழனியப்பன், “ஒவ்வொரு மனிதரும் தன்னால் இயன்ற பங்களிப்பைச் சமூகத்திற்கு ஆற்ற வேண்டும். அதற்கு என் தந்தையும் ஓர் உதாரணம். அவ்வகையில் அவருக்குப் பிள்ளையாக பிறந்ததைப் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்,” என்று கூறினார். 

“சிங்கப்பூருக்கும் இந்தியச் சமூகத்திற்கும் என் கணவர் ஆற்றிய பணிக்கான அங்கீகாரமாக இவ்விருதைக் கருதுகிறேன். மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இருப்பினும் என் கணவரே நேரடியாக இவ்விருதைப் பெற்றிருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். அது நடக்காமல் போனது வருத்தம் தருகிறது,” என்றார் அமரர் பழனியப்பனின் மனைவி திரு­வாட்டி சிந்தா­மணி பழ­னி­யப்­பன்.

குறிப்புச் சொற்கள்