சிங்கப்பூரில் 2012ஆம் ஆண்டுமுதல் சிங்கப்பூர் காவல்துறை கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி வந்துள்ளது. அவை கிட்டத்தட்ட 7,500 வழக்குகளுக்கு உதவியுள்ளதாகக் காவல்துறையினர் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தனர்.
தற்போது பொருத்தப்பட்டுள்ள 90,000க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் உதவியோடு குற்றம் புரிந்தவர்களை ஆதாரபூர்வமாகக் காவல்துறையினர் பிடிக்க முடிந்துள்ளது. இந்நிலையில், 2035ஆம் ஆண்டுக்குள் தற்போது இயங்கி வரும் கேமராக்களை மேம்படுத்துவதுடன் மேலும் 200,000 கேமராக்களைப் பொருத்தும் திட்டத்தில் சிங்கப்பூர் காவல்துறை உள்ளது.
இந்தக் கூடுதல் எண்ணிக்கையிலான கேமராக்கள் 2030ஆம் ஆண்டுக்குள் பொருத்தப்படும் என்று காவல்துறை முன்னதாக தெரிவித்திருந்தது. இருப்பினும், கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாகத் திட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அடுத்த பத்தாண்டுகளில் அதிகரிக்கப்படவுள்ள கண்காணிப்பு கேமராக்களின் மூலம் காவல்துறை அதிகாரிகளால் அதிக இடங்களைக் கண்காணிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதிலும் கேமராக்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது தொடர்பில் சிங்கப்பூர் காவல்துறை திங்கட்கிழமையன்று ஏலத்துக்கு அழைப்பு விடுத்தது.
வர்த்தகம், பொழுதுபோக்கு, விளையாட்டு ஆகியவற்றைச் சார்ந்த பகுதிகளில் புதிய கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களாக இவை இருக்கும் என்றும் கூறப்பட்டது. பேருந்து நிறுத்தங்கள், பேருந்து நிலையங்கள், எம்ஆர்டி நிலையங்களின் வெளிப்புறங்கள் ஆகியவற்றிலும் கேமராக்கள் பொருத்தப்படும்.
சட்டவிரோதக் கடன் அளித்தல், சொத்துகளைச் சேதப்படுத்துதல், வீட்டுக்குள் புகுந்து திருட்டு, மோட்டார் வாகனத் திருட்டு போன்ற பலதரப்பட்ட குற்றங்களைப் புரிந்தோரைப் பிடிக்க 2012ஆம் ஆண்டு முதல் கண்காணிப்பு கேமராக்கள் உதவிவருவதாக அறியப்படுகிறது.
மக்களின் கருத்தறிவதற்காக 2021ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில், பொது இடங்களில் குற்றங்கள் நிகழ்வதைத் தடுக்க கேமராக்கள் பொருத்தப்படும் திட்டத்திற்கு 91 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.