ஜோகூர் கடற்பால நெரிசலைக்குறைக்க கூட்டு நடவடிக்கை

2 mins read
99f1a677-6e28-4110-b6fc-020471c0dd3f
செப்டம்பர் 1ஆம் தேதி ஜோகூரை நோக்கிய கடற்பாலத்தில் வாகனங்கள் வரிசையாக நின்ற காட்சி. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரும் மலேசியாவும் அதன் எல்லைகளில் மக்கள் கடக்கும் இடங்களில் நெரிசலைக் குறைக்க கூட்டாக நடவடிக்கைகளை எடுக்கவிருக்கின்றன.

விரைவில் அந்த விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் பக்கத்தில் உள்ள சுங்க, குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் வளாகத்தில் (சிஐகியூ) நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன. அதே சமயத்தில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியின் மறுமேம்பாட்டுப் பணிகளும் விரிவாக்கமும் இரு நாடுகளுக்கு இடையிலான மக்கள் நடமாட்டத்தை சரளமாக்கும் என்றார் அவர்.

2026ஆம் ஆண்டில் முடிவடைவதாக எதிர்பார்க்கப்படும் ஜோகூர் பாரு-சிங்கப்பூர் அதிவேக ரயில் தொடர்புக்கான பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும் 10வது சிங்கப்பூர், மலேசியத் தலைவர்கள் ஆண்டுச் சந்திப்பில் பிரதமர் லீ தெரிவித்தார்.

இஸ்தானாவில் நடந்த சந்திப்பில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமிடம் ஏன் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை மேம்படுத்த வேண்டியிருக்கிறது என்பது குறித்து அவர் விளக்கினார்.

நில மீட்புடன்கூடிய மேம்பாட்டுப் பணிக்குத் திரு அன்வார் ஆதரவளித்தற்குத் திரு லீ நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மறுமேம்பாட்டுக்காக மலேசிய அதிகாரிகளின்கீழ் உள்ள நிலம் சிங்கப்பூருக்குத் தேவைப்படுவதாகக் கூறிய திரு அன்வார், அதற்கான விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.

“நில விற்பனைக்கு ஏற்பாடு செய்வோம். அதன் மூலம் மக்கள் நெரிசலைக் குறைப்பதற்கான வசதிகளை சிங்கப்பூர் அதிகரிக்கும். இதனால் சிங்கப்பூருக்குச் செல்லும் மலேசிய ஊழியர்களுக்கும் வாரயிறுதிகளில் மலேசியாவுக்கு வரும் சிங்கப்பூரர்களுக்கும் எல்லையைக் கடப்பது எளிதாக இருக்கும்,” என்று திரு அன்வார் கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் சொன்னார்.

“இரு நாடுகளும் இணைப்புக்கு முன்னுரிமை அளிக்கின்றன. இருந்தாலும் ஜோகூர் கடற்பாலத்தில் சில சமயங்களில் ஏற்படும் நெரிசல் பயணிகளுக்கு முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது,” என்றார் அவர்.

பிரதமர் லீ, ஜோகூர் கடற்பாலத்தின் ஆற்றலை முழு அளவில் பயன்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்று கூறினார்.

“மக்கள் நடமாட்டம், கடற்பாலத்தின் அகலத்தை மட்டும் பொறுத்தது அல்ல. இரு தரப்பில் எவ்வளவு விரைவில் குடிநுழைவு சோதனை முடிக்கப்படுகிறது என்பதையும் பொறுத்து இருக்கிறது,” என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ), பயணிகள் எல்லையைச் சுமுகமாக கடந்து செல்வதற்குப் பல்வேறு நடவடிக்கைககள் எடுத்துள்ளதையும் திரு லீ சுட்டிக்காட்டினார்.

மலேசியாவின் ஜோகூரில் உள்ள சிஐகியூ வளாகத்திலும் சிங்கப்பூரின் உட்லண்ட்சில் உள்ள சோதனைச் சாவடி வளாகத்திலும் குடிநுழைவு சோதனைகள் நடத்தப்படுகின்றன.

ஐசிஏயும் சிங்கப்பூர் நில ஆணையமும் கடந்த மே 2022ஆம் ஆண்டில் உட்லண்ட்சின் போக்குவரத்து 2050ஆம் ஆண்டில் 40 விழுக்காடு அதிகரிக்கும் என்று கணித்திருந்தன. அந்தச் சமயத்தில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியின் மறுமேம்பாடு, விரிவாக்கம் குறித்து சிங்கப்பூர் அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்