ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புபொருளியல் வட்டாரம்; 2024ல் புரிந்துணர்வு ஒப்பந்தம்

2 mins read
6719ad3a-59ac-458a-962c-5a2b06c6745d
சிங்கப்பூர், மலேசியத் தலைவர்கள் ஆண்டுதோறும் சந்திக்கும் ஏற்பாட்டின் ஒரு பகுதியாக சிங்கப்பூருக்கு வந்த மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமை பிரதமர் லீ சந்தித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இரண்டு நாள் சந்திப்பையொட்டி சிங்கப்பூர் வந்துள்ள மலேசியப்பிரதமர் அன்வார் இப்ராகிமும் பிரதமர் லீ சியன் லூங்கும் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம் உள்ளிட்ட பல விவகாரங்களில் இரு தரப்பிலும் நன்மை பயக்கும் வகையில் ஆக்ககரமான பேச்சை நடத்தியிருக்கின்றனர்.

ஜனவரி 11, 2024 அன்று திட்டத்தின் அடுத்த கட்டமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

இவ்வட்டாரம், இருநாடுகளுக்கு இடையிலான கடற்பாலம் வழியாக பொருள்களைத் தங்கு தடையின்றி எடுத்துச் செல்லவும் மக்கள் சுமுகமாக கடந்து செல்லவும் உதவும் என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரிலும் இஸ்கந்தர் மேம்பாட்டு வட்டாரத்திலும் பசுமையான சூழலையும் அது மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

இஸ்தானாவில் திரு அன்வார் இப்ராகிமுடன் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திரு லீ, பத்தாவது சிங்கப்பூர், மலேசியத் தலைவர்களின் வருடாந்திர ‘ஓய்விடச் சந்திப்பு’ ஒரு முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்டார்.

இருதரப்பு உறவுக்கு இரு நாடுகள் அளிக்கும் முக்கியத்துவத்தையும் இருதரப்பு மக்களும் நன்மை அடைய சேர்ந்து செயல்படுவதையும் இந்தச் சந்திப்பு பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார்.

திரு அன்வார், ஓய்விடச் சந்திப்புக்காக ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் வந்தார். இரு தலைவர்களுக்கும் இது முதல் முறை சந்திப்பு. கொள்ளைநோய்க்குப் பிறகு நடந்துள்ள முதல் சந்திப்பும் இது.

ஜோகூர்-சிங்கப்பூர் பொருளியல் வட்டாரம் குறித்துப் பேசிய அவர், குறிப்பிடத்தக்க நம்பிக்கையளிக்கும் திட்டம் என்று கூறினார்.

இத்திட்டத்தில் இரு நாடுகளும் கவனம் செலுத்த வேண்டிய செயலாக்க ஆய்வை நடத்தி வருகின்றன. முதலீட்டாளர்களின் முதலீடு, சந்தைக்கான தேவை இதில் மதிப்பிடப்படும்.

ஜோகூர்-சிங்கப்பூர் பொருளியல் வட்டாரத்திற்கு சிறப்பு வரி ஏற்பாடுகளும் இருக்கும்.

அது மட்டுமல்லாமல் இரு தரப்பிலும் வேலை செய்யும் மக்களுக்கு கடற்பாலத்தை கடந்து செல்வது எளிதாகவும் சுமுகமாகவும் இருக்கும் என்று பிரதமர் லீ மேலும் தெரிவித்தார்.

ஆய்வு முடிந்ததும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.

இந்தப் பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்