தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருமண நாளில் ஈசூன் வீட்டில் தீ

2 mins read
000a344b-f437-4cbe-ad4b-34e29f696470
சிங்கப்பூரில் 18 மணி நேரத்தில் 3வது தீ விபத்து நிகழ்ந்துள்ளது. - படம்: ஷின் மின் டெய்லி

ஈசூனில் உள்ள வீட்டில் திருமண நாளன்று தீ விபத்து ஏற்பட்டது.

ஈசூன் ரிங் ரோடு புளோக் 139ல் உள்ள வீட்டில் தீ மூண்டதாக ஞாயிறு பிற்பகல் 3.45 மணியளவில் தகவல் வந்தது என்று குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.

திருமண விழாவை முடித்துக் கொண்டு காலை 9.00 மணிக்கு தானும் தனது குடும்பத்தினரும் வெளியேறிவிட்டனர் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத மணப்பெண்ணின் தந்தை கூறினார்.

“பிற்பகல் 4.00 மணியளவில் அண்டை வீட்டுக்காரர் அழைத்து வீடு தீப்பிடித்துள்ளதாக எங்களிடம் தெரிவித்தார். அவர் நகைச்சுவைக்காக அப்படி சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால் சிறிது நேரத்தில் காவல்துறையும் எங்களிடம் தொடர்பு கொண்டது. பின்னர் நானும் எனது மகனும் வீட்டுக்கு விரைந்தோம்,” என்று அவர் கூறியதாக ஷின் மின் தகவல் தெரிவித்தது.

இதற்கிடையே காவல்துறை புளோக்கிலிருந்து 50க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக வெளியேற்றியது.

தீ அணைப்பாளர்கள் வீட்டை உடைத்துக் கொண்டு நுழைந்தனர். பின்னர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

வீட்டின் வரவேற்பறையில் உள்ள அலமாரியில் தீப்பிடித்திருந்தது. மற்ற இடங்களுக்கு தீ பரவவில்லை. ஆனால் சுவர் மற்றும் மேற்பகுதி கருகிவிட்டது என்று ஷின் மின் குறிப்பிட்டது.

வீட்டில் உள்ள பூசை அறை மேடையில் இருந்த விளக்கை குடும்பத்தினர் அணைக்காமல் விட்டுச் சென்றிருக்கலாம் என்று வீட்டின் உரிமையாளருமான அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் கடந்த 18 மணி நேரங்களில் நிகழ்ந்துள்ள 3வது தீ விபத்து இது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 25ஏ சாய் சீ ரோட்டில் உள்ள ஒரு கடை வீட்டிலும் திங்கட்கிழமை காலை அங் மோ கியோ அவென்யூ 10 புளோக் 415ல் உள்ள வீட்டிலும் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்