தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவில் உடனடிச் சண்டைநிறுத்தம் ஏற்படவேண்டும்

2 mins read
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் ஒரே நிலைப்பாடு
cfdcef58-e7f3-4b3e-8f23-d951cc90e022
இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, காஸாவிலிருந்து அதிக அளவில் புகை கிளம்புவதைக் காட்டும் படம். - படம்: ஏஎஃப்பி

இஸ்‌ரேல்-ஹமாஸ் பூசலில் உடனடிச் சண்டைநிறுத்தம் ஏற்படவேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டை சிங்கப்பூரும் மலேசியாவும் கொண்டுள்ளன.

அதிமுக்கியமாக மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக அவை கூறின.

இரண்டு நாடுகளும் இஸ்‌ரேலுடனும் பாலஸ்தீனத்துடனும் கொண்டுள்ள உறவுகள் வேறுபட்டாலும் அவை ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.

அரசதந்திர நிலைமையில் உள்ள அத்தகைய வேறுபாடுகள் தங்களின் இருதரப்பு உறவைப் பாதிக்காது என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.

இஸ்தானாவில் நடைபெற்ற சிங்கப்பூர்-மலேசியா தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்புக்கான கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.

மத்திய கிழக்கில் சண்டைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த அண்மைய ஐக்கிய நாட்டுத் தீர்மானம் ஒன்றை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் சுட்டினார்.

இந்த நிலைப்பாட்டைக் கூட்டாக இரண்டு நாடுகளும் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளும் ஏற்றுக்கொள்வதாக திரு அன்வார் கூறினார்.

இஸ்‌ரேல்-ஹமாஸ் பூசல் குறித்து சிங்கப்பூரும் மலேசியாவும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருப்பதாக பிரதமர் லீ கூறினார்.

மலேசியாவைப் பற்றிப் பேசியபோது, அவர்களின் நிலைமை நம்முடைய நிலைமையிலிருந்து வேறுபடுகிறது என்று திரு லீ குறிப்பிட்டார். காரணம், நாம் இஸ்ரேலுடன் அரசதந்திர உறவுகளைக் கொண்டுள்ளோம் என்று அவர் சொன்னார்.

ஆனால் அதே நேரத்தில் பாலஸ்தீனத்துடன் நாம் நட்பார்ந்த உறவைக் கொண்டுள்ளதாகவும் திரு லீ கூறினார்.

மலேசியா பாலஸ்தீனத்துடன் நட்பார்ந்த உறவு கொண்டுள்ளதைச் சுட்டிய திரு லீ, அதற்கும் இஸ்ரேலுக்கும் இடையே அரசதந்திர உறவு கிடையாது என்று தெரிவித்தார்.

அதனால், அரசதந்திர நிலைமை வேறுபடுவதாக திரு லீ கூறினார். இதனால் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே பிரச்சினை ஏற்படுவதற்குக் காரணம் இல்லை என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.

இப்போதைக்கு அமைதியே மிக முக்கியம் என்று திரு அன்வார் கூறினார். பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோர் கொல்லப்படுவதை நிறுத்தவேண்டும் என்றார் அவர்.

பல அரபு நாட்டுத் தலைவர்களுடன் தாம் தொடர்பில் இருப்பதாகக் கூறிய திரு அன்வார், அமைதியான தீர்வுக்கு மலேசியாவின் ஆதரவையும் வெளிப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்