அரசாங்க முதலீட்டு நிறுவனம் (ஜிஐசி) தனது இயக்குநர் சபைக்கு டிபிஎஸ் வங்கியின் முன்னாள் நிர்வாகி திருவாட்டி ஜெனட் வோங்கை புதிய உறுப்பினராக நியமித்துள்ளது.
கடந்த 2021 முதல் ஜிஐசி அமைப்பின் அபாயக் குழுவில் உள்ள திருவாட்டி வோங், நவம்பர் 8ஆம் தேதி முதல் இயக்குநர் சபை உறுப்பினர் பொறுப்பையும் கூடுதலாக ஏற்பார் என்று ஜிஐசி கடந்த வியாழக்கிழமை தெரிவித்தது.
டிபிஸ் வங்கிக் குழுமத்தின் நிர்வாகி பொறுப்பில், 2019ல் பதவி ஒய்வு பெறும்வரை இருந்த திருவாட்டி வோங், பெருநிறுவன வங்கிச் சேவைகள், உலகளாவிய பரிவர்த்தனை சேவைகள், உத்திபூர்வ ஆலோசனை ஆகியவற்றுடன் இணைப்பு, கொள்முதல் ஆகியவற்றையும் கவனித்து வந்தார்.
திருவாட்டி வோங் தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், யுபிஎஸ் குழுமம், புருடேன்ஷல், பிஎஸ்ஏ இன்டர்நேஷனல், ஜூரோங் நகராண்மைக் கழகம், பெவிலியன் கெப்பிடல் ஆகியவற்றின் இயக்குநர் சபையில் அங்கம் வகிக்கிறார்.
பத்திரங்கள் தொழில்துறை மன்றத்தின் உறுப்பினராகவும் உள்ள திருவாட்டி வோங், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.
மேலும் என்யுஎஸ் வர்த்தகப் பள்ளி, சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் கேர்ஷீல்டு லைஃப் மன்றம் ஆகியவற்றின் நிர்வாக ஆலோசனைக் குழு தலைவராகவும் செயல்படுகிறார்.

