தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனநிறைவளித்த ராணுவப் பயிற்சி

2 mins read
7fadc2f3-9060-4566-927f-0fe8b2678213
‘வாலபி’ ராணுவப் பயிற்சியில் போக்குவரத்து வாகனங்களைப் போர்க்கப்பலில் ஏற்றி இறக்கும் பணிகளுக்குப் பொறுப்பு அதிகாரியாக இரண்டாம் வாரண்ட் அதிகாரி சரவணன் நடராஜன், 40, செயல்பட்டார். - படம்: தற்காப்பு அமைச்சு

திட்டத்தைச் சரியாகத் தீட்டித் தெளிவு பெற வேண்டும். தெளிவடைந்த பின்னர் பயிற்சி செய்யவேண்டும்.

இந்த எண்ணப்போக்குடன் செயல்பட்ட இரண்டாம் வாரண்ட் அதிகாரி சரவணன் நடராஜன், 40, அண்மையில் நிறைவுபெற்ற ‘வாலபி’ ராணுவப் பயிற்சியில் முக்கியப் பொறுப்பு வகித்து, அதனை வெற்றிகரமாக நிறைவேற்றினார்.

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் ‘வாலபி’ பயிற்சி இவ்வாண்டு செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அக்டோபர் 22ஆம் தேதி வரை நடைபெற்றது.

கடல் முனைய ‘கம்பெனி சார்ஜண்ட் மேஜர்’ பதவிக்கு நியமனம் செய்யப்பட்டிருந்த திரு சரவணன், சக்கரமுள்ள வாகனங்களைக் கப்பலில் ஏற்றி இறக்குவது, ஹெலிகாப்டர் மூலமாகக் கப்பலில் பொருள்களை இறக்குவது ஆகிய பணிகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பை ஏற்றார்.

கடந்த ஏழு ஆண்டுகளில் ஆகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட ‘வாலபி’ பயிற்சியில் ஏறத்தாழ 4,300 சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகளுடன் கவச வாகனம் உட்பட, எடைமிக்க 450 போர்த்தளவாடங்களும் கொண்டு செல்லப்பட்டன.

இந்தப் பணிக்கு நுட்பமான ஒருங்கிணைப்பு தேவைப்படுவதால் கடினமாக உழைப்பும் சீரான தொடர்புமுறையும் தேவைப்பட்டதாக திரு சரவணன் குறிப்பிட்டார்.

“யோசனைகள் சிக்கலாக இருந்தாலும் புரியும்படி பகுதி பகுதியாக அவற்றை எளிமைப்படுத்த வேண்டியுள்ளது,” என்றார் இவர்.

“தளவாடங்களையும் மனிதவள ஏற்பாடுகளையும் பொறுத்தவரை, இந்தப் பயிற்சிக்கான முன்தயாரிப்பிற்கு மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இந்தப் பயிற்சியில் இடம்பெற்ற ஒவ்வொரு வீரரும் தமது பங்கு என்ன என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்வதற்காக பாவனைப் பயற்சிகளை நடத்தி வந்தோம்,” என்று இவர் விளக்கினார்.

சிங்கப்பூரின் இடப்பற்றாக்குறையால் ‘வாலபி’ பயிற்சி ஆயுதப் படைகளுக்கு அரிய வாய்ப்பு எனக் குறிப்பிட்ட திரு சரவணன், வீரர்கள் தங்கள் திறன்களைச் சோதிக்கும் களமாக இப்பயிற்சியைப் பயன்படுத்துவது முக்கியம் என்றார்.

‘வாலபி’ பயிற்சிக்காக நிம்மதியுடன் உழைக்க முடிந்ததற்கு, புரிந்துணர்வுடன் நடந்துகொண்ட தம் மனைவி துர்கா தேவிக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார், இரண்டு மகன்களுக்குத் தந்தையான திரு சரவணன்.

குறிப்புச் சொற்கள்