புவி அரசியல் பதற்றம், நிச்சயமற்ற பொருளியல் சூழ்நிலை போன்ற பாதிப்புகள் இருந்தாலும் சிங்கப்பூரின் உற்பத்தித் துறையும் சேவைத் துறையும் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று நம்புகின்றன.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட காலாண்டு அறிக்கையிலிருந்து இது தெரிய வருகிறது.
இவ்வாண்டு அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரையில் வர்த்தகச் சூழல் மேம்படும் என்று ஏழு விழுக்காடு உற்பத்தித் துறை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இது, 3வது காலாண்டைவிட அதிகம் என்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டது.
சேவைத் துறையில் உள்ள நிறுவனங்களில் 9 விழுக்காடு நிறுவனங்கள் வர்த்தக எதிர்காலம் தங்களுக்குச் சாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றன.
இதற்கு முன்பு இதே போன்ற ஆய்வை புள்ளி விவரத்துறையும் நடத்தியிருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு புதிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உற்பத்தித் துறையில் போக்குவரத்து பொறியியல் துறை 35 விழுக்காடு நம்பிக்கையோடு உள்ளது. தங்களுக்குச் சாதகமான வர்த்தக சூழல் இருக்கும் என்று அத்துறை உறுதியாக நம்புகிறது.
உலகளாவிய போக்குவரத்து தேவை வலுவாக இருப்பதால் விமானத் துறையும் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறது. கடற்துறை மற்றும் கரையிலிருந்து விலகிய பொறியியல் துறை ஆகியவை எண்ணெய், எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிபொருள் தொழில்களிடமிருந்து அதிக வர்த்தக வாய்ப்புகளுக்கு நம்பிக்கையோடு காத்துள்ளன.
மின்னியல் துறையும் 23 விழுக்காடு வர்த்தக சூழல் மேம்படும் என்று கணித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் துல்லியல் பொறியியல், உயிர்மருத்துவ உற்பத்தித் துறை, ரசாயனத் துறை ஆகியவை அடுத்த ஆறு மாதங்களுக்கு வணிக சூழலில் அவ்வளவு சிறப்பாக இருக்காது என்ற அவநம்பிக்கையை கொண்டுள்ளன.

