தனியார் வாடகை கார் சேவை நிறுவனமான கிராப் நவம்பர் 14ஆம் தேதியிலிருந்து தனது தளத்தைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு மேம்பட்ட கட்டண பங்கு விகிதத்தை அறிமுகப்படுத்துகிறது.
அவர்களது வருவாயைக் கணக்கிடும்போது பயணித்த தூரம், நேரம் ஆகியன கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
பயணிகள் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை இது பாதிக்காது. இதுகுறித்த கேள்வி- பதில்கள் கிராப் நிறுவனம் தனது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்நிறுவனம் தன் ஓட்டுனர்களுக்கு பொருள், சேவை வரி உட்பட ஒரு பயணத்திற்கு அவர் பெறும் வருவாயில் 20.18 விழுக்காடு என்ற நிலையான விகிதத்தை வசூலிக்கிறது.
புதிய முறையின் கீழ், இந்த நிலையான விகிதம் மாறுவிகிதமாகிறது. இது பயணத்துக்கு பயணம் மாறுபடும்.
பயணியை ஏற்ற ஓட்டுநர்கள் அதிக தூரம் பயணம் செய்து நீண்ட நேரம் செலவிட வேண்டியிருக்கும்போது இந்த புதிய “சேவை கட்டணம்” குறைவாக இருக்கலாம் என்று கிராப் குறிப்பிட்டது.
அதேநேரத்தில் ஓட்டுநர் பயணியை ஏற்றும் இடத்துக்கு அருகில் இருந்தால், சேவைக் கட்டணம் அதிகமாக இருக்கலாம்.
ஏப்ரலில் இருந்து கிராப் நடத்திய தொடர்ச்சியான சோதனைகளில், புதிய அமைப்பில் பங்கேற்கும் ஓட்டுநர்களுக்கு விதிக்கப்படும் சேவைக் கட்டணம் 25% வரை அதிகமாகவும் -10 விழுக்காடு வரை குறைவாகவும் இருந்ததை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்தது.
தொடர்புடைய செய்திகள்
குறைந்த சேவைக் கட்டணம் எனும்போது, பயணி செலுத்தும் தொகையைவிட ஓட்டுநர் அதிகம் சம்பாதிப்பார்.
அருகில் இருக்கும் பயணிகளை ஏற்ற வசூலிக்கப்படும் கூடுதல் சேவைக் கட்டணம், தூரத்தில் இருக்கும் பயணியை ஏற்ற வசூலிக்கப்படும் குறைந்த கட்டண சேவையை ஈடுசெய்யும் என்று கிராப் கூறியது.
கிராப்ஷெயார், ஹயர், ஸ்டாண்டர்ட், கிராப்ஹிட்ச், கிராப்கோச் தவிர்த்த கிராப்பின் ஏனைய போக்குவரத்து சேவைகள் அனைத்திற்கும் புதிய நடைமுறை பொருந்தும்.
ஏனைய சேவைகளுக்கும் புதிய செயல்முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் அது கருத்துகளின் அடிப்படையில் மேம்படுத்தப்படும் என்று கிராப் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டின் முற்பகுதியில் சோதனைத் திட்டத்தில் பங்கேற்ற கிட்டத்தட்ட 300 ஓட்டுநர்களில், 98 விழுக்காட்டினர் தங்கள் வருவாயில் முன்னேற்றம் அல்லது எந்த மாற்றமும் இல்லை என்று கூறியதாக கிராப் குறிப்பிட்டது.
புதிய இழப்பீட்டுக் கட்டமைப்பானது ஓட்டுநர்கள் மத்தியில் உள்ள ஒரு முக்கிய பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டதாகவும் அது கூறியது.