சாங்கி முனையம் 2 முழுவதுமாகத் திறப்பு; நான்கு மாடி நீர்வீழ்ச்சி, புதிய தோட்டம்

சாங்கி முனையம் 2 (டி2) மேம்படுத்தப்பட்டு முன்னதாகவே புதன்கிழமை முற்றிலும் மீண்டும் திறக்கப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட அந்த முனையத்தில் பல்லூடக நான்கு மாடி உயர மின்னிலக்க நீர்வீழ்ச்சிக் காட்சி, நில வடிவமைப்புத் தோட்டம் உள்ளிட்ட பல புதுமைகளும் இடம்பெற்று உள்ளன.

அந்த முனையத்தின் புறப்பாட்டுக் கூடத்தின் மையமாக அந்த மின்னிலக்க நீர்வீழ்ச்சி காட்சி அமைந்து இருக்கிறது.

‘தி ஒன்டர்ஃபால்’ என்று குறிப்பிடப்படும் அந்த நீர்வீழ்ச்சி, 14 மீட்டர் உயரம், 17 மீட்டர் அகலத்துடன் இருக்கிறது.

சாங்கி விமான நிலையக் குழுமம் புதன்கிழமை இந்த விவரங்களை அறிவித்தது.

நீர்வீழ்ச்சி இடத்தில் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை நான்கு நிமிட இசைக் காட்சி ஒன்றும் திரையிடப்படும்.

கனடாவைச் சேர்ந்த பியானோ இசைக் கலைஞர் ஜின்-மைக்கல் பிளாய்ஸ் அமைத்த அசல் இசையுடன் அந்த இசைக் காட்சியை 892 சதுர திரையில் காணலாம் என்றும் குழுமம் தெரிவித்தது.

அந்தப் பெரிய பல்லூடக நீர்வீழ்ச்சி தொங்கும் தோட்டம் ஒன்றுடன் அமைந்துள்ளது. புறப்பாட்டுக் கூடத்தில் குடிநுழைவுக்குப் பிறகு இடைவழிப் பயணிகள் இடத்தில் ‘டீரிம்ஸ்கேப்’ என்ற ஒரு புதிய தோட்டம் அமைந்து இருக்கிறது.

அதில் தாவரங்கள், மீன், மின்னிலக்க அம்சங்கள் நிறைந்து உள்ளன.

மின்னிலக்க ஆகாயப் பின்னணியில் அமைந்துள்ள அந்தத் தோட்டம் உடனுக்குடன் விமான நிலையத்தின் வெப்பநிலையை மதிப்பிட்டு கூறுகிறது.

அங்கு சிங்கப்பூரில் அவ்வளவாக காணப்படாத 100 சிற்றினங்களைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட தாவரங்கள் உள்ளன என்பதைக் குழுமம் சுட்டிக்காட்டியது.

அந்தத் தோட்டத்தில் மீன் குட்டை ஒன்றும் இருக்கிறது. 100க்கும் மேற்பட்ட பறவைகள், பூச்சிகள் இதர உயிரினங்களின் ஒலிகளையும் பயணிகள் கேட்டு மகிழலாம்.

முனையம் 2 விரிவாக்கப்பட்டு அடுத்த ஆண்டில்தான் திறக்கப்படவிருந்தது. என்றாலும் முன்னதாகவே அது இப்போது திறக்கப்பட்டுள்ளது.

மேம்பாட்டுப் பணிகளை அடுத்து அந்த முனையம் ஆண்டு ஒன்றுக்கு 28 மில்லியன் பயணிகளைக் கையாள முடியும். முன்பு இந்த அளவு 23 மில்லியனாக இருந்தது.

முனையம் 2ம் செயல்படத் தொடங்கி இருப்பதால் சாங்கி விமான நிலையம் ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு 90 மில்லியன் பயணிகளைக் கையாள முடியும்.

பயணிகளைக் கையாளக்கூடிய திறனை வைத்துப் பார்க்கையில், சாங்கி விமான நிலையத்தின் நான்கு முனையங்களில் முனையம் 2தான் இப்போதைக்கு ஆகப் பெரியது.

முனையம் 2ன் மேம்பாட்டுப் பணிகள் மூன்றரை ஆண்டுகளாக நடந்து வந்தன. அதனையடுத்து முனையம் 2ல் மேலும் 21,000 சதுர மீட்டர் இடப்பரப்பு சேர்க்கப்பட்டு இருக்கிறது.

மேம்பாட்டுப் பணிகளுக்காக அந்த முனையம் 2020 மே மாதம் மூடப்பட்டது. 2022 முதல் கட்டம் கட்டமாகத் திறக்கப்பட்டது.

சீரமைக்கப்பட்ட புதிய முனையம் 40 நகர்களை இணைக்கும் 16 விமான நிறுவனங்களுக்குச் சேவையாற்றுகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஜெர்மனியின் லுஃப்தான்சா முதலானவை அவற்றில் அடங்கும்.

மேம்படுத்தப்பட்ட புதிய முனையத்தில் புதிதாக இரண்டு சில்லறை வர்த்தகக் கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றன.

மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், முனையம் 2 திறப்பு விழாவில் புதன்கிழமை கலந்துகொண்டார்.

தொற்று காலத்தில் நிலவரங்கள் நிச்சயமில்லாமல் இருந்த போதிலும் சாங்கி விமான நிலையக் குழுமத்தின் முயற்சிகள் காரணமாக முனையம் 2 முன்னதாகவே திறக்கப்பட்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வட்டாரத்தின் விமானப் பயணத்துறை சூடுபிடிக்கிறது. அதைச் சிங்கப்பூர் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது முக்கியமானது என்பதை வலியுறுத்திய திரு டியோ, முனையம் 5ன் பணிகள் மீண்டும் தொடங்கி இருப்பதைச் சுட்டினார்.

அந்தப் புதிய முனையம் சேவையாற்றத் தொடங்கும் போது 2030களின் நடுப்பகுதிவாக்கில் சாங்கி விமான நிலையம் கையாளக்கூடிய வருடாந்தர பயணிகளின் எண்ணிக்கை மேலும் 50 மில்லியன் கூடும்.

புத்தாக்கம் முக்கியமானது என்றும் திரு டியோ வலியுறுத்திக் கூறினார்.

சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து தொழில்துறையில் கரிமக் கழிவுகளைத் தவிர்க்க வேண்டிய தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய முனையத்தில் தானியக்க குடிநுழைவு அனுமதிக் கூடங்கள், பயணிகள் தங்கள் சரக்குகளை உள்ளே அனுப்பக்கூடிய இயந்திரங்கள் முதலானவை எண்ணிக்கையில் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கின்றன.

உடற்குறையாளர்கள், பிள்ளைகளுடன் கூடிய குடும்பத்திற்கு உதவுவதற்காக தானியக்க சிறப்பு உதவித் தடங்களும் முதல்முதலாக அந்த முனையத்தில்தான் உள்ளன.

கொவிட்-19க்குப் பிறகு சாங்கி விமான நிலையம் வேகமாக மீட்சி கண்டு வருகிறது.

முனையம் 2 வழியாக 2022 மே மாதம் முதல் கிட்டத்தட்ட 10 மில்லியன் பயணிகள் பயணம் செய்து இருக்கிறார்கள். கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலையில் இது சுமார் 90% என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!