பழைய மடிக்கணினிகளுக்குப் புத்துயிர் அளிக்கும் செயல்திட்டம்

பழைய மடிக்கணினிகளுக்குப் புத்துயிர் அளிக்கும் செயல்திட்டம்

2 mins read
9862c6b7-3377-423c-a308-0a883fc34377
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கிழக்குக் கல்லூரியில் புதிய சுற்றுச்சூழல் ஆய்வகம் அமைந்துள்ளது. பழைய மடிக்கணினிகளுக்குப் புதுப்பொலிவு அளிப்பது எப்படி என்பது பற்றி அங்கு மாணவர்கள் கற்கிறார்கள். - படம்: லேனோவோ

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், பழைய, பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகளுக்குப் புதுப்பொலிவை அளித்து அவற்றை மறுபுழக்கத்திற்கு ஆயத்தமாக்குகிறார்கள்.

இந்தத் தொழில்துறையைச் சேர்ந்த பங்காளி நிறுவனங்களுடன் சேர்ந்து அந்தக் கழகம் பயிற்சி செயல்திட்டம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறது.

பயன்படுத்தப்பட்ட பழைய மடிக்கணினிகளுக்கு, இதர மின்னிலக்கச் சாதனங்களுக்குப் புதுப்பொலிவு கொடுத்து, அவற்றை மீண்டும் பயன்படுத்தத் தக்கவையாக உருவாக்கும் திறனை மாணவர்களுக்கு அந்தச் செயல்திட்டம் போதிக்கிறது.

மின்னணுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான லெனோவோ, கணினிச்சில்லு தயாரிப்பு நிறுவனமான ஏஎம்டி ஆகியவற்றுடன் சேர்ந்து தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கிழக்குக் கல்லூரி தன்னுடைய புதிய ஆய்வுக் கூடத்தில் அந்தச் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

அதில் சேர்ந்து 40 மணி நேரம் படிக்கும் மாணவர்களுக்குச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மூன்று கல்லூரிகளையும் சேர்ந்த மின்னணுப் பொறியியல் துறையின் ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் தேர்ச்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

அவர்கள் பழைய கணினிகளை பழுதுபார்த்து அவற்றுக்குப் புதுப்பொலிவு அளிப்பது எப்படி என்பதை அந்த ஆய்வகத்தில் கற்றுக்கொள்கிறார்கள்.

இதுவரையில் அந்தப் புதுப்பொலிவு செயல்திட்டத்தின்கீழ் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தைச் சேர்ந்த 60 ஊழியர்கள், மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாக கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அந்தப் பயிற்சி படிப்பு 2024 ஏப்ரல் வாக்கில் தனிப்பட்ட விருப்பப் பாட அடிப்படையில் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தைச் சேர்ந்த 720 மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது அந்தப் பயிற்சி படிப்பின் இலக்கு.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இயக்கத்தின் கீழ் அடுத்த மூன்றாண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள தனிப்பட்ட செயல்திட்டம் ஒன்றில் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இந்தத் தேர்ச்சிகளைப் போதிப்பதும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி போன்ற மின்னணுப் பொருள்களைப் புதுப்பித்து அவற்றுக்குப் புதுவாழ்வு அளிக்கும் தேர்ச்சிகளைக் கொண்ட ஓர் ஊழியர் அணியை இந்தச் செயல்திட்டத்தின் மூலம் உருவாக்க வேண்டும் என்பது கழகத்தின் நோக்கம்.

அத்தகைய ஓர் அணி உற்பத்தித் தொழில்துறையில் சுற்றுச்சூழல் முயற்சிகளுக்கு மிக முக்கியமான ஒன்று என்று நம்பப்படுவதாக லேனோவோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிகல் லீ கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்
மாணவர்