செசில் ஸ்திரீட்டில் உள்ள நாட்டியக் கூடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நான்கு பெண்களை மானபங்கப்படுத்தியதாக ஆடவர் மீது மானபங்கப்படுத்தும் நோக்கத்துடன் பலவந்தமாக நடந்துகொண்டதாக ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்கள் யாவும் 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி நடைபெற்றதாக அமீன் அசீஸ் அன்சாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவரையும் சேர்த்து எட்டுப் பேர் மீது மானபங்க குற்றச்சாட்டுகள் புதன்கிழமையன்று சுமத்தப்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் விதமாக அவர்களின் பெயர்களை வெளியிட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, செர்ரி டிஸ்கோதேக் உள்ளே 18 வயது பெண்ணை அமீன் மார்பிலிருந்து வயிற்றுப் பகுதிவரை தொட்டதாகவும் பின்னர் அப்பெண்ணின் பின்பக்கத்தை தொட்டதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், நாட்டியக் கூடத்திற்கு உள்ளே மற்றோர் 18 வயது பெண்ணை அவர் பலவந்தமாக பிடித்திழுத்து அவரின் பின்பக்கத்தைத் தொட்டதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், அமீன் 23 வயது மாது ஒருவரை உதட்டில் முத்தமிட்டதாகவும் பின்னர் அவரது ஒரு மார்பகப் பகுதியைத் தொட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் செர்ரி டிஸ்கோதேக் வெளியே அமீன் அந்த 23 வயது மாதின் மார்பகப் பகுதியை மீண்டும் தொட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அமீன் 19 வயதுப் பெண்ணின் இடுப்புப் பகுதியை இழுத்துப் பிடித்து அவரது ஒரு மார்பகப் பகுதியைத் தொட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.