சிங்கப்பூரின் உள்ளூர் மீன் பண்ணைகளுக்கு ஊக்கமூட்டக் கூடிய புதிய ஆய்வுச் செயல்திட்டம் இடம்பெறுகிறது.
அதன் விளைவாக, ஆசிய கடல் உயிரினங்களுக்கான தடுப்பு ஊசி மருந்துகளைத் தயாரிக்கவும் மீன்களின் உடல் நலனை கடலில் வசிக்கும் நுண்ணுயிரிகள் எப்படி பாதிக்கும் என்பதைப் பற்றி ஆராயவும் வழி பிறக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
‘அக்வாபொலிஸ்’ என்று குறிப்பிடப்படும் அந்தச் செயல்திட்டம், மூன்று சிற்றினங்களைச் சேர்ந்த மீன்களில் ஒருமித்த கவனத்தைச் செலுத்தும்.
மீன் வளர்ப்புத் துறையில், இனப்பெருக்கம், காரணிகள், சத்துணவு, சுற்றுச்சூழல், ஆற்றல் மேம்பாடு ஆகியவற்றை அந்தச் செயல்திட்டம் உள்ளடக்கும்.
சிங்கப்பூரில் நடக்க இருக்கும் உலக வேளாண், உணவு அறிவியல் கருத்தரங்கில் புதன்கிழமை ஓர் உடன்பாடு கையெழுத்திடப்படும்.
அதைத் தொடர்ந்து ஆய்வுகள் அதிகாரபூர்வமாகத் தொடங்கும்.
சிங்கப்பூர் உணவு முகவை அமைப்பு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம், தெமாசெக் உயிர் அறிவியல் ஆய்வுக் கூடம், பல உள்ளூர் பண்ணைகள் ஆகியவை அந்த உடன்பாட்டில் கையெழுத்திடும்.
மீன்வளர்ப்புத் துறை என்பது கடல்வாழ் உயிரினங்களைக் கடலில் அல்லது நிலப்பகுதிகளில் வளர்க்கும் துறையாகும்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் மீன் பண்ணைகளில் பெரும்பாலானவை ஜோகூர் நீரிணையில் கடல்பகுதிகளில் அமைந்துள்ளன.
உள்ளூர் நிறுவனங்கள் 2022ல் 4,400 டன் கடல் உணவை உற்பத்தி செய்தன.
சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் கடலுணவில் இது சுமார் 8% ஆகும்.
புரதச் சத்து அதிகம் உள்ள மீன் சிறந்த உணவாகும். உள்ளூர் மீன் உற்பத்தியைப் பெருக்குவது சிங்கப்பூரின் இலக்காக இருக்கிறது.
சிங்கப்பூரில் மிகவும் ஆற்றல் மிக்க வழிகளில் மீன் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்று உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதைச் சாதிக்க வேண்டும் என்றால் மீன்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான நோய்கள், ஒட்டுண்ணிகள் ஆகியவற்றைத் திறம்படச் சமாளிக்க வேண்டும்.
புதிதாக பிடித்து வளர்க்கப்படும் மீன்களின் ஆயுளைக் கூட்ட வேண்டும். சுற்றுச்சூழலால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் குறைக்க வேண்டும். இவை உயிர்நாடியானவை.
சிங்கப்பூர் பெரிய அளவில் மீன் வளர்ப்புத் திட்டத்தைத் தீட்டி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ‘அக்வாபொலிஸ்’ செயல்திட்டம் இடம்பெறுகிறது.

