தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆய்வு: சம்பளத்தை உயர்த்த நான்கில் மூன்று முதலாளிகள் திட்டம்

2 mins read
d396383e-8534-416e-9b0b-fd64f8348f20
அடுத்த ஆறு மாதங்களில் புதிதாக வேலை தேடுவதில் மும்முரமாக ஈடுபட 41% நிபுணர்கள் திட்டமிடுவதாக ஆய்வு கண்டறிந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேவை அதிகமுள்ள குறிப்பிட்ட சில வேலைகளுக்கான சம்பளத்தை 2024ஆம் ஆண்டில் உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக சிங்கப்பூரின் 72% நிறுவனங்கள் ஆய்வு ஒன்றில் குறிப்பிட்டுள்ளன.

இவ்வாண்டு வேலையில் ஆள் அமர்த்துவது ‘அதிகம்’ அல்லது ‘ஓரளவு’ போட்டித்தன்மை மிக்கதாக இருக்கும் என ‘மோர்கன் மெக்கின்லி’ என்ற திறன் சேவைகள் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 80% நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. ஆய்வில் 650 நிறுவனங்களைச் சேர்ந்த 3,400 நிபுணர்கள் பங்கேற்றனர்.

சம்பளம், அனுகூலங்கள் தொடர்பில் கடந்த ஆறு மாதங்களில் புதிய திறனாளர்களை வேலையில் அமர்த்த கிட்டத்தட்ட 40% நிறுவனங்கள் தவறிவிட்டதாக ஆய்வு கண்டறிந்துள்ளது.

போட்டித்தன்மை கடுமையாக இருந்தாலும் அடுத்த ஆறு மாதங்களில் 43% சிங்கப்பூர் நிறுவனங்கள் வேலையில் ஆள் அமர்த்தத் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.

“கொள்ளைநோய்க்குப் பிந்திய காலகட்டத்தில் வேலையில் ஆள் அமர்த்தும் வேகம் கணிசமாக மெதுவடைந்திருந்தாலும், உயர்தர திறனாளர்களை நியமிப்பது இன்னமும் நடைபெறுகிறது. ஆனால், அதில் சவால்கள் உள்ளன,” என்றார் மோர்கன் மெக்கின்லி சிங்கப்பூர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குர்ஜ் சந்து.

வேலை தேடுவோரிடையே நிலவும் அச்சம், வெளிநாட்டுத் திறனாளர்கள் வெளியேறுவதால் ஏற்படும் திறன் குறைபாடு, நீண்ட வேலை நியமன செயல்முறை ஆகிய காரணங்களால் இந்தப் போக்கு காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

வேலை தேடுவோரில் 41 விழுக்காட்டினர் அடுத்த ஆறு மாதங்களில் மும்முரமாக புதிய வேலை தேடத் திட்டமிடுவதாகக் கூறியிருந்தனர்.

அதிகச் சம்பளம் ஈட்டுவது ஊழியர்கள் வேலை மாறுவதற்குத் தொடர்ந்து முதன்மை காரணமாக இருப்பதாகவும் அதைத் தொடர்ந்து வாழ்க்கைத்தொழில் முன்னேற்றம், மேம்பாட்டு வாய்ப்புகள் காரணங்களாக இருப்பதாகவும் ஆய்வு கண்டறிந்துள்ளது.

சிங்கப்பூரிலுள்ள முழுநேர ஊழியர்கள் ஒரு மாதத்தில் சராசரியாக $5,783 ஈட்டுவதாக ஆய்வு கணித்துள்ளது. இதன்படி ஆண்டுக்கு $69,396 வருமானம் ஈட்டப்படுகிறது.

இதற்கிடையே, அடுத்த ஆண்டு தங்களுக்குச் சம்பள உயர்வு இருக்கும் என்று ஆய்வில் பங்கேற்ற 60 விழுக்காட்டினர் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

ஊக்கத்தொகை, வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடு, வேலைநேரத்தில் நெகிழ்வுத்தன்மை, சுகாதார மற்றும் நலனுக்கான ஆதரவு, சுகாதாரக் காப்புறுதி ஆகிய அம்சங்கள் முதல் ஐந்து வேலையிட அனுகூலங்களாகக் கருதப்படுவதாகவும் ஆய்வு கண்டறிந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்