தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குக் கைகொடுக்கும் தொழிற்கல்லூரிகள்

2 mins read
0477dfeb-1b97-44c2-a429-b6a37030e78f
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி உருவாக்கி இருக்கும் காற்றுத்தர கண்காணிப்புச் சாதனம் ஒன்றை வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் ஒரு கண்காட்சியில் பார்வையிட்டார். - படம்: சாவ் பாவ்

நகரச் சூழலில், இயந்திர மனிதத் தொழில்நுட்பம், தானியக்கமய வழிகளை உருவாக்குவதற்கான ஆற்றல்களைப் பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் இருந்து சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்க இருக்கிறது.

செயற்கைப் புரதங்கள், சுற்றுச்சூழல் போன்ற புதிய துறைகளில் கிடைக்கும் வாய்ப்புகளை, உணவு தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள ஆதரவும் கிடைக்க உள்ளது.

எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு, புத்தாக்க மையம் ஒன்றை அமைக்கும்.

நகரமயச் சூழலில் இயந்திர மனிதத் தொழில்நுட்பம், தானியக்கமயத் தீர்வுகளைக் காண அந்த மையம் பாடுபடும்.

அதேவேளையில் உணவு உற்பத்தித்துறைக்கான இப்போதைய புத்தாக்க மையம் விரிவுபடுத்தப்படும்.

சாண்ட்ஸ் பெருங்காட்சி, மாநாட்டு மையத்தில் வியாழக்கிழமை நடந்த சிறிய, நடுத்தர நிறுவன தொழில்நுட்ப நாள்-2023 நிகழ்ச்சியில் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் இவற்றை அறிவித்தார்.

புதிய புத்தாக்க மையம், சிறிய, நடுத்தர நிறுவனங்களுடன் சேர்ந்து புதிய பொருள்களை, புதிய சேவைகளை, தீர்வுகளை உருவாக்கும்.

சிறப்புமிக்க சாதனங்களை, ஆய்வுக் கூடங்களை, பயிற்சி வசதிகளை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள உதவும் ஒரே இட புத்தாக்க மையமாக அது திகழும்.

ஆலோசனை, மதிப்பீட்டு ஆய்வுகள், இணை தயாரிப்புகள் உள்ளிட்ட ஆதரவையும் அது வழங்கும்.

ஆய்வு உருவாக்க வளங்களை, புத்தாக்க ஆற்றல்களை, வசதிகளைச் சொந்தமாக ஏற்படுத்திக்கொள்வதில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பல சவால்களை எதிர்நோக்குகின்றன என்பதை அங்கீகரிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின்கீழ் மொத்தம் 12 புத்தாக்க மையங்கள் செயல்படும்.

உணவு தயாரிப்புத்துறைக்கான புத்தாக்க மையம், விரிவடையும்.

செயற்கை புரதம், சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்ப்பது ஆகியவை போன்ற புதிய துறைகளில் நாட்டம் உள்ள நிறுவனங்களுக்குத் தேவையான ஆதரவையும் ஆற்றலையும் அது வழங்கும்.

இதனிடையே, நீ ஆன் பலதுறை தொழிற்கல்லூரி, சிங்கப்பூர் பலதுறைத்தொழிற்கல்லூரி ஆகியவற்றுடன் அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு முகவை (ஏ*ஸ்டார்) அமைப்பு புரிந்துணர்வுக் குறிப்புகளில் வியாழக்கிழமை கையெழுத்திட்டது.

தொழில்துறை சூழல் பரிணமித்து வருகிறது. அதனால் ஏற்படக்கூடிய தேவைகளைத் தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் ஆற்றல் வளம் இருப்பதை அந்தக் குறிப்புகள் உறுதிப்படுத்தும்.

உள்ளூர் நிறுவனங்களுக்கான செயல்முறை, தொழில்நுட்ப வழிகாட்டித் திட்டங்களை அந்தப் பலதுறை தொழிற்கல்லூரிகள் உருவாக்க புரிந்துணர்வுக் குறிப்புகள் வகை செய்யும்.

குறிப்புச் சொற்கள்