சிங்கப்பூரின் மத்திய வங்கி, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தங்கம் வாங்கிய உலகின் மூன்றாவது பெரிய நிதி நிறுவனமாகத் திகழ்கிறது.
இதில் சீனாவும் போலந்தும் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன.
உலக தங்க மன்றம் இந்த விவரங்களைத் தெரிவித்தது.
சிங்கப்பூரின் மத்திய வங்கியான சிங்கப்பூர் நாணய ஆணையம் 2023 மூன்றாவது காலாண்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட தங்க பரிவர்த்தனைகளில் நான்கு டன் தங்கத்தைக் கொள்முதல் செய்தது. அதையும் சேர்த்து இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 75 டன் தங்கம் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது என்று மன்றம் தெரிவித்தது.
சீனாவின் மத்திய வங்கியான பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சைனா வங்கிதான் ஆக அதிகமாக தங்கத்தை கொள்முதல் செய்தது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 78 டன் தங்கத்தை அது வாங்கி தன்னுடைய சேமிப்பை அதிகப்படுத்தியது.
சீனாவின் மத்திய வங்கி இந்த ஆண்டு தொடக்கம் முதலே தன்னுடைய தங்க இருப்பை அதிகரித்து வந்துள்ளது.
அந்த வங்கி, இந்த ஆண்டில் இதுவரையில் 181 டன் தங்கத்தை கொள்முதல் செய்து அதன் மொத்த சேமிப்பை 2,192 டன்களாக அதிகரித்து இருக்கிறது.
இது உலக அளவிலான மொத்த தங்க சேமிப்பில் 4 விழுக்காட்டுக்குச் சமம் என்பது குறிப்பிடத்தக்கது.
போலந்து நாட்டின் தேசிய வங்கியான நேஷனல் பேங்க் ஆஃப் போலந்து, இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தொடர்ந்து தங்கத்தை வாங்கிக் குவித்தது.
ஜூலை முதல் செப்டம்பர் வரைப்பட்ட மூன்று மாதத்தில் அது 57 டன் தங்கத்தை வாங்கியது. இதன் மூலம் இந்த ஆண்டில் அது மொத்தம் 105 டன் தங்கத்தைக் கொள்முதல் செய்து இருக்கிறது.
தங்களுடைய சேமிப்பு, பலமுனை அணுகுமுறை, இறங்குமுக போக்கில் இருந்து பாதுகாப்பது, பண வளம் ஆகியவற்றை உறுதிப்படுத்தவும் அதிகரிக்கவும் தங்கத்தில் மத்திய வங்கிகள் தொடர்ந்து முதலீடு செய்கின்றன என்று உலக தங்க வங்கியின் ஆசிய பசிபிக் பிரிவின் தலைவர் திரு ஷாகாய் ஃபான் கூறினார்.
சிங்கப்பூரர்களைப் பொறுத்தவரை, தங்கத்தின் இருப்பு அதிகமானால் அது அவர்களின் நாணயத்திற்கும் பொருளியலுக்கும் மேலும் பாதுகாப்பை வழங்கும் என்று திரு ஷாகாய் ஃபான் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
மத்திய வங்கிகளின் பண இருப்பைப் பலமுனைப்படுத்த தங்கம் உதவுகிறது.
பொருளியலின் நிலவரங்களைப் பொறுத்து நாடுகளின் நாணயங்களின் மதிப்பு கூடும், குறையும்.
ஒரு நாட்டின் நாணயத்திற்கு, அந்த நாட்டின் மத்திய வங்கிதான் பொறுப்பு. ஒரு நாட்டின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அம்சமாக தங்கம் திகழ்கிறது.
அனைத்து வகை பொருளியல் சூழல்களிலும் அது உலகம் முழுவதுமே மிக முக்கியமான சேமிப்புச் சொத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அரசாங்க முறிகளும் இதில் கைகொடுக்கின்றன.
இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்கான தன்னுடைய அறிக்கையை வெளியிட்ட உலக தங்க மன்றம், தான் எதிர்பார்த்ததைவிட அதிகமாக மத்திய வங்கிகள் தங்கத்தைக் கொள்முதல் செய்து இருப்பதாகத் தெரிவித்தது.
மத்திய வங்கிகள் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தங்கத்தை வாங்கிய வேகம், வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாக இருந்தது.
அவை வாங்கிய மொத்த தங்கத்தின் அளவு 1,147 டன். இது ஐந்தாண்டு சராசரி அளவைவிட 8% அதிகம்.
மத்திய வங்கிகள் தங்களுடைய தங்க இருப்பை இந்த ஆண்டின் 3வது காலாண்டில் 337 டன் அதிகப்படுத்தின. இந்த அதிகரிப்பு 2வது காலாண்டில் 175 டன்னாக இருந்தது.
இருந்தாலும் 2022 ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் கொள்முதல் செய்யப்பட்ட அளவுக்கு இந்த ஆண்டின் 3வது காலாண்டில் நிகர கொள்முதல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரைப்பட்ட காலத்தில் 459 டன் தங்கம் கொள்முதல் செய்யப்பட்டது.
ஓர் அவுன்ஸ் தங்கத்தின் விலை கடந்த வெள்ளிக்கிழமை US$2,000ஐ தாண்டியது. இப்போது அதன் விலை சுமார் US$1,980 ஆக இருக்கிறது.
சிங்கப்பூரில் தங்கத்திற்கான பயனீட்டாளர் தேவை இந்த ஆண்டின் 3வது காலாண்டில் 20% குறைந்து 2.7 டன்னாக இருந்தது.
தங்க நகைகளுக்கான தேவை ஆண்டுக்காண்டு அடிப்படையில் இந்த ஆண்டின் 3வது காலாண்டில் 16% குறைந்து 1.6 டன்னாக இருந்தது.
தங்கப் பாளங்கள், தங்க நாணயத்திற்கான தேவை ஆண்டுக்காண்டு அடிப்படையில் இந்த ஆண்டின் 3வது காலாண்டில் 26% குறைந்து 1.1 டன்னாக இருந்தது.

