கடல் மட்டம் உயர்வதால் சிங்கப்பூர் கடலோரப் பகுதிகளுக்கு ஏற்கெனவே கணிக்கப்பட்ட அளவுக்கு மிரட்டல் இருக்காது என்றே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பருவநிலை மாற்றங்கள் காரணமாக கடல் மட்டம் உயர்கிறது. இதன் விளைவாக தாழ்ந்த கடலோரப் பகுதிகளில் கடல்நீர் புகுந்து விடுகிறது.
காலப்போக்கில் கடலில் இருக்கும் செங்குத்துப் பாறைகள், கடற்கரையோரப் பகுதிகள் போன்றவை அழிந்து போய்விடுகின்றன.
இந்த நிலையில், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சிங்கப்பூர் புவி கண்காணிப்பு நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், காலாங் ஆற்றுப் படுகை அமைந்து இருக்கும் தெற்கு சிங்கப்பூரில் உள்ள கடலோரப் பகுதிகள், கடல் மட்டம் உயர்ந்தாலும்கூட எந்த பாதிப்பும் இன்றி இருக்கின்றன என்று தெரிவித்து உள்ளனர்.
கடும் மழை காரணமாக நீர்தேக்கப் பகுதிகளில் இருந்து கடலுக்குத் தண்ணீர் அடித்துச் செல்லப்படும்போது அதோடு கூழாங்கற்கள், மணல், வண்டல் மண் எல்லாம் அதிக அளவில் சேர்ந்து வருவதால் கடற்கரைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு அவ்வளவாக இல்லை என்று அவர் கூறுகிறார்.
இப்படி கடலில் சென்று சேரும் படிவுகள் காரணமாக ஊசியிலைக் காடுகள் போன்ற தாவரங்கள் வளர்வதற்கு ஆதரவு கிடைக்கிறது. மண் அரிப்பும் தடுக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆய்வு உதவிப் பேராசிரியர் ஸ்டீபன் சுவா தலைமையில் அவர்கள் ஆய்வு நடத்தினர்.
அதன் முடிவு செப்டம்பர் மாத ‘மரைன் ஜியாலஜி’ என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
காலாங் ஆற்றுப் படுகை சிங்கப்பூரின் முக்கிய ஆற்றுப் பகுதியாக இருப்பதால் அதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதாக டாக்டர் சுவா தெரிவித்தார்.
கடும் மழை காரணமாக கடலுக்குச் செல்லும் தண்ணீருடன் கூழாங்கற்கள், மணல், வண்டல் மண் போன்றவை கடலைச் சென்றடைகின்றன.
என்றாலும் அதிவேக நகரமயம் காரணமாக அப்படி கடலைச் சென்றடையும் வீழ்படிவுகளின் அளவு சிங்கப்பூரிலும் சரி உலகளவிலும் சரி குறைந்துவிட்டது.
ஆறுகளின் திசை மாற்றம், நிலம் மீட்பு, உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு போன்றவை இதற்குக் காரணம்.
சிங்கப்பூரில் இத்தகைய வீழ்படிவுகள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றி இன்னமும் தெரியவில்லை. என்றாலும் அதன் அளவு காலவோட்டத்தில் குறைந்து இருக்கிறது என்பது நிச்சயம். இதற்கு நகரமயமாக்கமே காரணம் என்று டாக்டர் சுவா மேலும் கூறினார்.

