தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூருக்கு வந்து உண்டியல் பணத்தைத் திருடிய மூவருக்கு ஏழு மாதம் சிறை

2 mins read
ab175efd-ffec-4b93-852f-c890e6c8e5d2
சீனாவைச் சேர்ந்த மூன்று பேர் உண்டியல்களில் இருந்து எப்படி திருடுவது என்பதைச் சமூக ஊடகத்தைப் பார்த்து கற்றுக்கொண்டார்கள். - படம்: எஸ்டி கோப்புப்படம்

சீனாவைச் சேர்ந்த மூன்று பேர் உண்டியல்களில் இருந்து எப்படி திருடுவது என்பதைச் சமூக ஊடகத்தைப் பார்த்து கற்றுக்கொண்டார்கள்.

அந்த வித்தையுடன் சிங்கப்பூர் வந்த அவர்கள், இங்கு கைவரிசையைக் காட்டினர்.

சிங்கப்பூர் முழுவதும் ஆறு வழிபாட்டு இடங்களில் உண்டியல்களில் கைவைத்து $1,000க்கும் மேற்பட்ட தொகையை அவர்கள் களவாடினர்.

அந்த நபர்களின் கைவரிசை இரண்டு நாள்களுக்கு மேல் நீடிக்க முடியவில்லை.

ஸோ ஃபெங்ஷோ, 32, சின் ஸியானோ, 29, சின் சோபான், 38, ஆகிய அந்த மூவருக்கும் வியாழக்கிழமை தலா ஏழு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

சீனாவில் அந்த மூவரும் டோயின் என்ற சமூக ஊடகத் தளத்தில் இருந்து உண்டியல் திருட்டை கற்றுக்கொண்டனர்.

ஒரு கயிற்றில் ஓர் உலோகத்தைக் கட்டி உண்டிலுக்கு உள்ளே விடுவார்கள். அந்த உலோகத்தில் ஒட்டுத்தாள் ஒன்று இருக்கும். உண்டியலில் கிடக்கும் பணம் அந்த ஒட்டுத்தாளில் ஒட்டிக்கொள்ளும்.

கயிற்றை மேலே தூக்கி பணத்தை எடுத்துவிடுவார்கள். இதுதான் அவர்களின் தந்திரம்.

அந்த மூவரும் செப்டம்பர் 6ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தார்கள்.

ஒரு ஹோட்டலில் தங்கினார்கள்.

அந்த ஹோட்டலுக்கு பக்கத்தில் இருந்த கடைகளில் இருந்து உலோகத் துண்டு, கயிறு, ஒட்டுத்தாளை வாங்கினார்கள்.

அடுத்த இரண்டு நாள்களில் தாம்சன் ரோட்டில் உள்ள நொவினா தேவாலயம், பொங்கோல் ரோட்டில் உள்ள பு டி புத்தர் கோயில் உள்ளிட்ட பல வழிபாட்டு இடங்களில் அந்த மூவரும் கைவரிசைக் காட்டினர்.

யாராவது வருகிறார்களா என்பதை ஒருவர் பார்த்துக்கொள்ள, மற்றவர்கள் உண்டியல்களில் இருந்து திருடினர். இப்படியாக அவர்கள் ஆறு இடங்களில் கைவரிசையைக் காட்டினர்.

திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற இடங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அந்த மூன்று பேர்வழிகளையும் பார்த்து சந்தேகம் அடைந்து அது பற்றி காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர்.

பிரத்தியேகப் படச்சாதனங்கள் மூலம் அந்த மூவரையும் ஹோட்டலில் காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்தனர்.

அமெரிக்கா, கனடா, ஹாங்காங் நாணயம் உள்ளிட்ட பல்வேறு ரொக்கத்தையும் S$1,479 பணத்தையும் திருடியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

திருடிய பணத்தை அந்த மூவரும் திருப்பிக் கொடுக்கவில்லை.

முதிய பெற்றோரையும் பிள்ளைகளையும் தாங்கள் கவனித்துக்கொள்ள வேண்டி இருந்ததால் இந்தக் காரியத்தைச் செய்ததாகவும் தங்கள் மீது கருணை காட்டும்படியும் நீதிமன்றத்தை அந்த மூவரும் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், தண்டனையை விதிக்கும்போது இத்தகைய குடும்ப நிதிப் பிரச்சினைகளை எல்லாம் நீதிமன்றம் கருத்தில் கொள்ளாது என்று மாவட்ட நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துவிட்டார்.

குறிப்புச் சொற்கள்