பொதுப் போக்குவரத்தில் மானபங்கச் சம்பவங்கள் அதிகரிப்பு; எச்சரிக்கை வாசகங்கள் அறிமுகம்

பொதுப் போக்குவரத்தில் மானபங்கச் சம்பவங்கள் அதிகரிப்பு; எச்சரிக்கை வாசகங்கள் அறிமுகம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

03 Nov 2023 - 5:20 pm

2 mins read

பொதுப் போக்குவரத்தில் மானபங்கச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அத்தகைய குற்றங்கள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வழிவகைகளைப் பற்றி காவல்துறை ஆராய்ந்து வருகிறது.

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் பொதுப் போக்குவரத்தில் 97 மானபங்கச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 84 மானபங்கச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

இவ்வாண்டின் முதல் பாதியில் பொதுப் போக்குவரத்தில் குட்டைப் பாவடைக்குள் படமெடுத்தல் தொடர்பாக 23 சம்பவங்கள் நிகழ்ந்தன. இது கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் 12 குறைவு.

இந்நிலையில், பொதுப் போக்குவரத்தில் நிகழும் மானபங்கக் குற்றங்கள் பற்றி பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு கிழக்கு ரயில் பாதையில் உள்ள ஹார்பர்ஃபிரண்ட் எம்ஆர்டி நிலையத்தில் சிங்கப்பூர் காவல்துறையின் பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்புத் தளபத்தியம் அதன் காவல்துறை கருப்பொருள் ரயிலை அறிமுகம் செய்துள்ளது.

அந்த ரயிலின் ஆறு பெட்டிகளின் தரையிலும் பக்கவாட்டிலும் மானபங்கம் குறித்து எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுகின்றன.

எச்சரிக்கை வாசகங்களுடன் ஒருவேளை பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது மானபங்கம் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளும் ரயிலில் இடம்பெறுகின்றன.

இந்த ரயில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. நான்கு வாரங்களுக்கு அது சேவை வழங்கும்.

நிலப் போக்குவரத்து ஆணையம், தேசிய குற்றத் தடுப்பு மன்றம், எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி கார்ப்பரேஷன் ஆகியவை ஒன்றிணைந்து இதுபோன்ற மேலும் நான்கு ரயில்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் அறிமுகம் செய்ய இருக்கின்றன.

இந்த நான்கு ரயில்களும் கிழக்கு-மேற்கு ரயில் பாதை, வடக்கு-தெற்கு ரயில் பாதை, வட்ட ரயில் பாதை, டௌன்டவுன் ரயில் பாதையில் நான்கு வாரங்களிலிருந்து ஆறு வாரங்களுக்குச் சேவை வழங்கும்.

குறிப்புச் சொற்கள்
எம்ஆர்டி