சட்டவிரோத பாலியல் மருந்து விற்பனையாளர்களிடம் லஞ்சம் வாங்கியதாகவும் சொந்த பயன்பாட்டுக்காக அத்தகைய மருந்துகளைத் திருடியதாகவும் முன்னாள் செர்டிஸ் அதிகாரி மூவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அந்த குற்றங்களை அவர்கள் புரிந்தபோது அவர்கள் சிங்கப்பூர் காவல்துறைக்காகப் பணிபுரிந்துகொண்டிருந்ததாக லஞ்ச, ஊழல் விசாரணைப் பிரிவு கூறியது.
30 வயது திருமுருகன் சண்முகம் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சட்டவிரோத பாலியல் மருந்து விற்பனையாளர்கள் இருவரிடம் அவர் கடந்த ஆண்டு லஞ்சம் வாங்கியதாக நம்பப்படுகிறது.
அவர்களுக்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்க அவர்களிடமிருந்து திருமுருகன் சண்முகம் பணம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
மற்றோர் அதிகாரியான 30 வயது முகம்மது ஹஃபிசுதீன் ஹனாப்பியாவுடன் இணைந்து திருமுருகன் சண்முகம் சட்டவிரோத பாலியல் மருந்து விற்பனையாளரிடம் லஞ்சம் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஹஃபிசுதீன் மீது ஓர் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் மீது நம்பிக்கை துரோகக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத பாலியல் மருந்தைச் சொந்த பயன்பாட்டுக்காக அவர் கையாடியதாகக் கூறப்படுகிறது.
இன்னொரு அதிகாரியான 66 வயது முகம்மது அரிஸ் ஜலில், சொந்த பயன்பாட்டுக்காக சட்டவிரோத பாலியல் மருந்துகளைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
அவர் மீது நம்பிக்கை துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
திருமுருகனும் ஹஃபிசுதீனும் சீன நாட்டவரான சென் ஸிசியோங்கிடமிருந்து $140 லஞ்சம் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
30 வயது சென் ஸிசியோங் மீது ஓர் ஊழல் குற்றச்சாட்டு பதிவானது.
இன்னொரு சீன நாட்டவரான சென் டொங்லியாங்கிடமிருந்து திருமுருகன் $750 லஞ்சம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
திருமுருகன் மீதான வழக்கு விசாரணை டிசம்பர் மாதம் 4ஆம் தேதிக்கு ஒத்திவைப்பட்டுள்ளது.
அரிஸ், ஹஃபிசுதீன் திங்கட்கிழமையன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.
சென் ஸிசியோங் டிசம்பர் 4ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.