தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கார்கள், சரக்கு வாகனங்களுக்குக் கூடுதல் சிஓஇ

2 mins read
394b0d80-0010-45ab-86bb-1fdf69e73628
நவம்பர் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரை பெரிய, சிறிய கார்களுக்கும் சரக்கு வாகனங்களுக்கும் கூடுதல் வாகன உரிமைச் சான்றிதழ்கள் ஒதுக்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரும் நவம்பர் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரை கார்கள், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கான வாகன உரிமைச் சான்றிதழ்கள் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்குக் கூடுதலாக 1,614 சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இதற்கு முன்னதாக நவம்பர் மாதத்துக்கும் ஜனவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்துக்கு சிறிய, பெரிய கார்களுக்காக இம்மாதம் ஏற்கெனவே 1,895 வாகன உரிமைச் சான்றிதழ்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

ஒதுக்கப்படும் சான்றிதழ்களில் 1,600 சிசிக்கும் அதிகமான இயந்திரங்களைக் கொண்ட கார்கள் அல்லது 110 கிலோவாட்டுக்கும் அதிகமுள்ள மின்சார வாகனங்களுக்கும் கூடுதல் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இவ்வகை கார்களுக்கு கூடுதலாக 863 சான்றிதழ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது 29.4 விழுக்காடு அதிகரிப்பு.

இதன்மூலம் அடுத்த மூன்று மாதங்களில் இவ்வகை வாகனங்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ்களின் மொத்த எண்ணிக்கை 2,937லிருந்து 3,800ஆக இருக்கும்.

1,600 சிசிக்கும் குறைந்த இயந்திரங்களைக் கொண்ட கார்கள், 110 கிலோ வாட் வரையுள்ள மின்சார கார்கள் ஆகியவற்றுக்கு கூடுதலாக 546 வாகன உரிமைச் சான்றிதழ்கள் ஒதுக்கப்படும்.

இது 11 விழுக்காடு அதிகரிப்பு.

இதன்மூலம் இவ்வகை கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ்களுக்கான மொத்த எண்ணிக்கை 5,513.

சரக்கு வாகனங்களுக்காக கூடுதலாக 205 சான்றிதழ்கள் ஒதுக்கப்படும். இது 22.2 விழுக்காடு அதிகரிப்பு.

இதன்மூலம் நவம்பர் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரை இவ்வகை வாகனங்களுக்கான சான்றிதழ்களின் மொத்த எண்ணிக்கை 1,129.

மற்ற பிரிவுகளுக்கான வாகன உரிமைச் சான்றிதழ்களில் மாற்றமில்லை என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

“சிறிய கார்கள், பெரிய கார்கள், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சான்றிதழ் எண்ணிக்கை அடுத்த ஆண்டு தொடர்ந்து அதிகரிக்கும் என்பதை வாகனம் வாங்க விரும்புபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பிறகு 2025லிருந்து அது உச்சத்தை எட்டும்.

“மோட்டார் சைக்கிள்களுக்காக ஒதுக்கப்படும் சான்றிதழ்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இவ்வாண்டைப் போலவே இருக்கும்,” என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் அதிகமாக உள்ளது. பலர் வாகனங்கள் வாங்குவதாலும் சான்றிதழ்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த மூன்று மாதங்களில் கூடுதல் சான்றிதழ்கள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக அண்மைய வாகன உரிமைச் சான்றிதழ் ஏலத்தில் பெரிய கார்களுக்கான சான்றிதழ் கட்டணம் $150,001ஆகப் பதிவானது.

பொதுப் பிரிவுக்கான கட்டணம் $158,004.

இப்பிரிவு பொதுவாக பெரிய கார்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இப்பிரிவை மோட்டார் சைக்கிள்களைத் தவிர்த்து மற்ற பிரிவுகளுக்குப் பயன்படுத்தலாம்.

பெரிய கார்களுக்கான பிரிவும் பொதுப் பிரிவும் தொடர்ந்து ஆறாவது முறையாக புதிய உச்சத்தை எட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிய வகை கார்களுக்கான சான்றிதழ் கட்டணம் $106,000ஆக உள்ளது.

குறிப்புச் சொற்கள்