தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரர்களின் உதவியால் உச்சிகுளிர்ந்த வெளிநாட்டு ஊழியர்

3 mins read
f61022f7-8898-4300-9a70-69c09700c758
சதை உண்ணும் பாக்டீரியாவினால் காலையே கிட்டத்தட்ட இழந்த வெளிநாட்டு ஊழியர் திரு அம்ஜத் கான், 42, சிங்கப்பூரர்களின் நிதியுதவியோடு சிகிச்சைகள் மேற்கொண்டு குணமடைந்துவருகிறார். - படம்: அம்ஜத் கான்

சரியான நேரத்தில் உதவிக்கரம் நீட்டிய சிங்கப்பூரர்களால் தன் கால் காப்பாற்றப்பட்டு, தற்போது குணமடைந்துவருவதாகத் தெரிவித்துள்ளார் 42 வயது வெளிநாட்டு ஊழியர் திரு அம்ஜத் கான் பாஷா.

தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டத்தின் அருகே உள்ள கூத்தாநல்லூர் பகுதியிலிருந்து சிங்கப்பூரிலுள்ள ‘கலர்னெட்’ நிறுவனத்தில் திரு அம்ஜத் பணிபுரிய வந்தபோது, அவருக்கு 28 வயது. இதய நோயாளியான தந்தை உள்ளிட்ட, மொத்தம் ஒன்பது குடும்ப உறுப்பினர்களை ஆதரித்துவந்தார். அவருக்கு இரு பிள்ளைகளும் உண்டு.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா சென்று திரும்பிய திரு அம்ஜத்துக்குக் கால்வீக்கம் ஏற்பட்டது. இரு மருந்தகங்களில் கீல்வாதத்திற்கான (Gout) மருந்துகள் வழங்கப்பட்டன. ஆனால், வீக்கம் குறையவில்லை.

ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியன்று திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரின் கால்களும் மோசமாக வீங்கியிருந்தன. முதலாளியின் அறிவுரைப்படி வசிப்பறையில் உடன் தங்கியுள்ளவர்களின் உதவியுடன் சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவசரப் பிரிவில் ஆபத்தான நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் சிகிச்சை பெற்றார்.

அவரது உடலில் சதை உண்ணும் பாக்டீரியாவினால் (Necrotizing Fasciitis) பாதிப்பு ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அத்துடன் பாக்டீரியா மற்ற உடல்பாகங்களுக்குப் பரவாமலிருக்க அவர் கால் நீக்கப்பட வேண்டியிருந்தது என்றும் கூறினார் திரு அம்ஜத்.

ஆனால், திரு அம்ஜத்தின் நல்ல நேரம் - பாக்டீரியா மேலும் பரவாததால் அவரது கால் காப்பாற்றப்பட்டது. எனினும், அவரது காலிலிருந்து பெரிய அளவில் சதை வெட்டி எடுக்கப்பட்டதால், மீண்டும் நடப்பதற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் தோல் ஒட்டுதல் சிகிச்சையும் அவருக்குத் தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

சிங்கப்பூரில் மேல் சிகிச்சைகள் செய்யவிருந்தால் சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் ‘ஸ்டெப்-டவுன்’ பராமரிப்பில் இருந்தபடியே சிகிச்சைகளுக்கு வந்துவந்து போகவேண்டும் என்றும் சிகிச்சைக்கு வாரத்திற்கு ஏறக்குறைய $29,000 செலவாகும் என்றும் கணிக்கப்பட்டதாகக் கூறினார் திரு அம்ஜத்.

சட்டவிதிமுறைப்படி தன் நிறுவனம் எடுத்திருந்த S$15,000 மருத்துவக் காப்பீடு ஏற்கெனவே இருந்த மருத்துவச் செலவுகளுக்குப் போதவில்லை என்பதால் இந்தியா திரும்ப முடிவெடுத்தார் திரு அம்ஜத். செப்டம்பர் 27 இரவு அவர் தமிழகம் புறப்பட்டார்.

அவரது பயணத்திற்கு சாங்கி, திருச்சி விமான நிலையக் குழுக்களும் சிங்கப்பூரின் கூத்தாநல்லூர் சங்கமும் உதவின.

திரு அம்ஜத் கானையும் மைத்துனரையும் இந்தியாவிற்கு வழியனுப்பவந்த சிஏஜி குழுவினரும் அன்பு நெஞ்சங்களும். படத்தில் திரு அம்ஜத்துக்குப் பெரிதும் உதவிய ஆர்வலர் திரு கேரி ஹரிஸ் (வலமிருந்து மூன்றாவது), சிங்கப்பூரின் கூத்தாநல்லூர் சங்கச் செயலாளர் திரு சிராஜுதீன் (இடமிருந்து மூன்றாவது) இடம்பெறுகின்றனர்.
திரு அம்ஜத் கானையும் மைத்துனரையும் இந்தியாவிற்கு வழியனுப்பவந்த சிஏஜி குழுவினரும் அன்பு நெஞ்சங்களும். படத்தில் திரு அம்ஜத்துக்குப் பெரிதும் உதவிய ஆர்வலர் திரு கேரி ஹரிஸ் (வலமிருந்து மூன்றாவது), சிங்கப்பூரின் கூத்தாநல்லூர் சங்கச் செயலாளர் திரு சிராஜுதீன் (இடமிருந்து மூன்றாவது) இடம்பெறுகின்றனர். - படம்: ரவி சிங்காரம்

விமானம் தமிழகத்தில் தரையிறங்கியதும் ‘ஏபிசி’ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திரு அம்ஜத்துக்கு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, தோல் ஒட்டுதல் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

“இச்சம்பவம் பயங்கரமானதாக இருந்தாலும் பல அன்புள்ளங்கள் எனக்கு உதவியுள்ளன. சக ஊழியர்கள், சமூகத் தலைவர்கள், சிராஜுதீன்,கேரி ஹாரிஸ் போன்றோரும் முன்பின் தெரியாதவர்களும்கூட என்னைச் சந்தித்து ஆறுதல் வார்த்தையுடன் நிதியுதவியும் அளித்துள்ளனர்,” என்றார் திரு அம்ஜத்.

சிகிச்சையால் அடுத்த ஓராண்டு காலமாவது திரு அம்ஜத் வேலை செய்வது கடினம். அவரது வருமானம் இல்லாமல் அவரது குடும்பத்தின் நிலைமை கேள்விக்குறியே.

“மிகவும் சிறப்பாக, கடமையுணர்ச்சியோடு நெடுங்காலமாக எங்களுடன் பணியாற்றியவர் திரு அம்ஜத். அப்படிப்பட்டவருக்கு இச்சோதனை வந்தது கவலைக்குரியது,” என்றார் அவரது முதலாளி திரு சைமன் கீ.

“குணமடைந்து ஒரு நாள் மீண்டும் சிங்கப்பூரில் வேலைசெய்து என் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள விரும்புகிறேன்,” என்கிறார் திரு அம்ஜத்.

குறிப்புச் சொற்கள்