தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீவக வீட்டுத் தகுதிக் கடிதத்தின் காலவரம்பு நீட்டிப்பு

2 mins read
216660c3-061e-467d-950d-0708ee15862a
வீவகவின் புதிய வீடு, மறுவிற்பனை வீடு வாங்க முக்கியமாக தேவைப்படும் வீட்டுத் தகுதிக் கடிதத்தை ஒன்பது மாதங்கள் வரை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. - கோப்புப் படம்

வீட்டு மானியம், மத்திய சேம நிதி, கடன் வரம்பு உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய ‘எச்எஃப்இ’ எனும் வீவக வீட்டுத் தகுதிக் கடிதத்தின் (HDB Flat Eligibility) காலவரம்பு நீட்டிக்கப்படுகிறது. அதாவது, தகுதிக் கடிதத்தை ஆறு மாதத்திற்குப் பதிலாக ஒன்பது மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

புதிய, மறுவிற்பனை வீடுகளை வாங்குவோருக்கு போதுமான கால அவகாசம் வழங்குவதற்காக இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய தகுதிக் கடிதம் காலாவதியானால் மறுபடியும் வீட்டுக்கு விண்ணப்பிக்கப்படுவதும் இதனால் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நீட்டிப்பு, நவம்பர் 7ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும் என்று சனிக்கிழமையன்று வீவக வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

எச்எஃப்இ வழங்கப்பட்ட நாளிலிருந்து ஒன்பது மாதங்களுக்கு செல்லுபடியாகும். இத்தகைய கடிதத்தை வைத்திருப்பவர்களுக்கு காலம் நீட்டிக்கப்பட்டது குறித்து குறுந்தகவல் வழியாக தெரிவிக்கப்படும் என்றது அறிக்கை.

ஒருவர், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வீடு அல்லது மறுவிற்பனை வீடுகளை வாங்க முடியுமா என்பதை எச்எஃப்இ கடிதம் தெரிவிக்கிறது. மத்திய சேம நிதியில் எவ்வளவு தொகையை வீட்டு மானியத்திற்குப் பயன்படுத்தலாம், எந்த அளவுக்கு வீட்டுக் கடன் வாங்க முடியும் போன்ற விவரங்கள் அக்கடிதத்தில் இடம்பெற்றுள்ளன.

இதற்கு முன்பு இருந்த வீவக கடன் தகுதி கடிதத்திற்குப் பதிலாக ‘எச்எஃப்இ’ வீவக வீட்டுத் தகுதிக் கடிதத்தை கழகம் அறிமுகம் செய்துள்ளது.

வீவக வீடு வாங்கும் நடைமுறைகளை எளிமையாக்கவும் வீடு வாங்குவோருக்கு வீடு வாங்குவதற்குத் தேவையான நிதி, செலவு போன்ற விவரங்கள் தெளிவாக தெரிவிக்கவும் இந்தக் கடிதம் வழங்கப்படுகிறது.

வீவக வீடுகளை விற்பனைக்கு வெளியிடும்போது தங்களுடைய வீட்டு விண்ணப்பங்களுடன் எச்எஃப்இ கடிதத்தையும் இணைப்பது அவசியமாகும். மறுவிற்பனை வீட்டை வாங்குவோருக்கும் விற்பனையாளரிடமிருந்து வீட்டை வாங்க இந்தக் கடிதம் முக்கியமாகும்.

தொடர்புடைய செய்திகள்

கடந்த மே 9ஆம் தேதி புதிய தகுதிக் கடிதம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு புதிய, மறுவிற்பனை வீடுகளுக்கான 65,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 60,600 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு எச்எஃப்இ கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2023 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வீட்டு விற்பனைக்கு ஏறக்குறைய 11,000 பேர் தகுதிவாய்ந்த எச்எஃப்இ கடிதத்துடன் விண்ணப்பித்திருந்தனர்.

இவ்வாண்டு டிசம்பர் மாதம் பிடிஓ வீட்டு விற்பனைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் முன்கூட்டியே எச்எஃப்இ கடிதத்திற்கு விண்ணப்பிக்குமாறு வீவக அறிவுறுத்தியுள்ளது. நவம்பர் 11ஆம் தேதிக்குள் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கும்படி அது கேட்டுக்கொண்டது.

வீவக அனைத்து ஆவணங்களையும் பெற்ற பிறகு எச்எஃப்இ கடிதத்திற்கான விண்ணப்பங்களை சரிபார்ப்பதற்கு ஏறக்குறைய ஒரு மாதம் தேவைப்படும். பிடிஓ விற்பனைக்கான உச்ச நேரத்தில் இதற்கு அதிக காலம் எடுக்கலாம் என்று வீவக தெரிவித்தது.

அக்டோபரில், வீவக தனது 2023ஆம் ஆண்டின் இறுதி விற்பனைக்கான எட்டு திட்டங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டது. இதில், பிடோக், பீஷான், புக்கிட் மேரா, புக்கிட் பாஞ்சாங், ஜூரோங் வெஸ்ட், குவின்ஸ்டவுன் மற்றும் உட்லண்ட்ஸ் ஆகிய இடங்களில் கட்டப்படும் சுமார் 6,000 வீடுகளுக்கான விற்பனை டிசம்பரில் வெளியிடப்படவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்