சமூகப் பணியில் பட்டயம் பெற்றதையடுத்து அத்துறையில் முழுநேரமாக இறங்கவிருக்கிறார் கட்டட மேற்பார்வையாளர் வீ.வீரகுமரன், 54,
பிறருக்கு உதவி செய்யும் ஆர்வத்துடன் பல்லாண்டுகளாகத் தன் ஓய்வு நேரங்களில் தொண்டாற்றி வரும் திரு வீரகுமரன், அதற்கான சான்றிதழ் பெற்றதில் மனநிறைவு கொள்கிறார்.
‘எஸ்எஸ்ஐ’ எனப்படும் சமூகச் சேவை கல்விக்கழகத்தில் பயின்று பட்டயம் பெற்ற திரு வீரகுமரனுடன் ஏறத்தாழ 560 பேர் கெளரவிக்கப்பட்டனர். பாராட்டுப் பெற்றோரில் சிலர், 30 ஆண்டுகள் வரையிலான சமூகப் பணி அனுபவம் நிரம்பியவர்கள்.
தோ பாயோ ஹப் நிலையத்தில் சனிக்கிழமையன்று (நவம்பர் 4) நடந்த நிகழ்ச்சியில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி சிறப்பித்தார்.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), இந்து அறக்கட்டளை வாரியம் போன்ற அமைப்புகளுக்குத் தொண்டூழியம் செய்துவரும் திரு வீரகுமரன், கட்டட மேற்பார்வைத் தொழிலைக் காட்டிலும் தொண்டூழியத்தில் தமக்கு அதிக நாட்டம் இருந்ததை உணர்ந்தார்.
2017ல் இவர் சமூகச் சேவை சான்றிதழுக்குக்கான ஓராண்டு படிப்பை வெற்றிகரமாக நிறைவேற்ற, பின்னர் பட்டயப் படிப்பை ஈராண்டுகளில் முடித்துக்கொண்டார்.
திரு வீரகுமரன் பயின்ற அதே காலகட்டத்தில் அவருடைய மனைவி வசந்தி கலியபெருமாள், 54, பிஎஸ்பி கல்விக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார்.
“நான் படித்தவற்றை என் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்வேன். அவர்களது யோசனைகளைக் கேட்டுப் பயன்பெறுவேன்,” என்றார் திரு வீரகுமரன்.
தொடர்புடைய செய்திகள்
திரு வீரகுமரன், அடுத்த ஆண்டு ஜூலையில் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் (எஸ்யுஎஸ்எஸ்) இதே துறையில் பட்டப்படிப்பு பயிலவிருக்கிறார்.
“பட்டயம் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளித்தாலும் இது தொடக்கந்தான்,” என்றார் அவர்.
பெற்றோர் இருவரும் தம்மையும் தம் அண்ணனையும் பட்டதாரிகளாக ஆக்கிவிட்டு, தங்களது சொந்தக் கனவுகளை நோக்கி பயணம் செய்வது நெகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று சொன்னார் நன்யாங் தாெழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் கணிதத் துறையில் பயிலும் திரு வீரகுமரனின் மகள் ஷர்வினி, 22.


