‘அடுத்த பணியை ஏற்க நான் தயார்’

‘அடுத்த பணியை ஏற்க நான் தயார்’

3 mins read
‘சிங்கப்பூரர்களின் ஆதரவைப் பெற என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்’
0326de70-fc07-4bd5-9b93-1cf8cc4e30a1
மக்கள் செயல் கட்சி மாநாட்டில் உரையாற்ற வந்த துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரதமர் லீ சியன் லூங்கிடமிருந்து பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்காக தாம் கடுமையாக உழைத்து வருவதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தார்.

“நான் தனியாக இல்லை. நான் பல ஆண்டுகளாக நெருக்கமாகப் பணியாற்றிவரும் நான்காம் தலைமுறைத் தலைவர்களின் குழுவுடன் இருக்கிறேன். நாங்கள் தலைமைத் தாங்க தயாராக இருக்கிறோம்,” என்று கூறிய அவர், அடுத்தப் பணிக்கு தயாராக இருப்பதாகவும் சொன்னார்.

மக்கள் செயல் கட்சியின் துணைத் தலைமைச் செயலாளருமான திரு வோங், எப்படி மக்களுடன் தொடர்புகொள்வது, கட்சி எதனைக் குறிக்கிறது, அதன் நீண்டகாலத் திட்டங்கள் என்ன, குழுவாக என்ன செய்ய விரும்புகிறது என்பதை மக்களுக்கு கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மக்கள் செயல் கட்சியின் வருடாந்திர விருது வழங்கும் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் செயல் கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

“ஒட்டுமொத்தமாக, நமது கட்சி புதுப்பிக்கப்பட வேண்டும், புத்துயிர் பெற வேண்டும். பலப்படுத்தப்பட வேண்டும்,” என்று திரு வோங் வலியுறுத்தினார்.

தனது தலைமைத்துவ அணுகுமுறையைக் குறித்துப் பேசிய அவர், எல்லாம் தமக்குத் தெரியும், எல்லாவற்றுக்கும் பதில் இருக்கிறது என்ற எண்ணத்தில் செயல்படவில்லை என்றார்.

மாறாக, பலதரப்பட்ட பார்வைகள், கண்ணோட்டம், கருத்துகளுக்கு செவிசாய்த்து யோசனைகளுக்கு திறந்தமனதுடன் இருப்பதாக அவர் சொன்னார்.

“ஒரு தலைவராக, அனைத்து சிங்கப்பூரர்களின் நலன்களை மதிப்பிட்டு, ஒரு சமநிலையான முடிவை எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் என்னுடைய முடிவில் உடன்படாத, திருப்தியடையாதவர்கள் சிலர் எப்போதும் இருப்பார்கள்.

“என்னால் அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது என்பதை அறியும் அளவுக்கு அரசாங்கத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். இருந்தாலும் என்னுடைய முடிவு ஏன் சிறந்தது என்பதை விளக்கவும் பிரச்சினைகளில் வெளிப்படையாகச் செயல்படவும் பெரும்பான்மை சிங்கப்பூரர்களின் ஆதரவைப் பெறவும் என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்,” என்று திரு வோங் குறிப்பிட்டார்.

தமது தலைமைத்துவத்துக்கான அணுகுமுறை, சிங்கப்பூரர்களிடையே பொதுவான அடிப்படை அம்சங்களைக் கண்டறிவது, அவர்களை ஒன்றாக இணைப்பதில் இருக்கும் என்று அவர் கூறினார்.

“சிங்கப்பூர் எப்போதும் பன்முகத்தன்மையுடன் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். நம்முடன் உடன்படாத அல்லது மாறுபட்ட எண்ணங்களைக் கொண்டிருப்பவர்களுடன் தொடர்பை துண்டித்துக் கொண்டால் அது நமக்கு இழப்பையே ஏற்படுத்தும்.

“நம்மைச் சுற்றி ஒரு கோட்டை போட்டு வரம்பை விதித்துக் கொள்ளக் கூடாது, அதற்குப் பதிலாக அனைவருக்கும் பொதுவான அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் இடமளித்து பொதுவான தீர்வுகள் காணப்பட வேண்டும்,” என்றும் துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் உணர்வுகளை பாதிக்கக்கூடிய சில விவகாரங்களில் மக்கள் செயல் கட்சி எடுத்த முடிவுகளை அவர் சுட்டிக்காட்டினார்.

தாதிகள் தலையங்கி அணிய அனுமதித்தது, 377ஏ சட்டப் பிரிவை ரத்து செய்தது அவற்றில் சில உதாரணமாகும்.

முன்னேறும் சிங்கப்பூர் இயக்கத்தின் வழியாக கருத்திணக்கம் காணப்பட்டதையும் அவர் எடுத்துரைத்தார்.

நான்காம் தலைமுறை தலைமையில் நடத்தப்பட்ட அந்த இயக்கத்தின் அறிக்கை அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.

“கொள்கை ஆவணங்களுக்கு மேலாக அந்த அறிக்கை இருந்தது. சிங்கப்பூரின் எதிர்காலத்திற்கான பார்வையை பகிர்ந்துகொள்ளும் வகையிலும் சிங்கப்பூர் எதிர்காலத்தின் வழிகாட்டியாகவும் இருந்தது,” என்று துணைப் பிரதமர் வோங் சொன்னார்.

அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி தெள்ளத் தெளிவான வெற்றியைப் பெறும் அல்லது முழுமையான வெற்றியைப் பெறும் என்று தாம் கருதவில்லை என்றும் திரு வோங் வலியுறுத்தினார்.

“நாம் அனைவரும் ஒன்றாக, சிங்கப்பூரர்களை ஒன்றிணைக்கும் மற்றும் நமது எதிர்காலத்தை ஒன்றாகக் கட்டியெழுப்பும் நோக்கத்தில் நமது கட்சியின் உறுதியையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவோம்,” என்று திரு வோங் உரையின் முடிவில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்