வாழ்வில் 50 வருடங்களாக மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் அடிக்கடி திருட்டுக் குற்றம் புரிந்து சிறைக்குச் சென்று வந்துள்ள 75 வயது இங் கிம் சுவி என்ற மாதுக்கு மீண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை 3 சுற்றுப்பயணிகளின் கைப்பையில் இருந்து அவர் பணப்பைகளைத் திருடிய குற்றங்களுக்கு 4 ஆண்டு சிறைவாசம் காத்திருக்கிறது.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஏற்கனவே செய்த 2 குற்றங்களுக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்ட காலத்தில் அவர் மீண்டும் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
கணவர் கைவிட்டுச் சென்றுவிட்டதால், பிள்ளைகளை காப்பாற்றவே அவர் திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
மேலும், கூட்டம் நிறைந்த கடைத்தொகுதிகளில் திறந்த கைப்பைகளுடன் நடமாடுவோரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அருகே இங் செல்வார்.
தாமும் பொருள்களை வாங்குவதுபோல பாவனை செய்தபடி, உரிமையாளர் கவனிக்காதபோது அவர்களின் திறந்த கைப்பைகளில் இருந்து பணப்பையை எடுத்துக்கொள்வது இவரது செயல்பாடாகும்.

