புதிய திட்டம்; ஒரே வீட்டை பகிர்ந்துகொள்ளும் மூத்தோரை பராமரிக்க பணிப்பெண்

2 mins read
8bfdc72d-f532-48c8-b621-bf0743286a2a
ரெட் கிரவுன்ஸ் என்ற அமைப்பு வீவக, கொண்டோமினிய வீடுகளை வாடகைக்கு எடுத்து ஒவ்வொரு வீட்டில் நான்கு மூத்தோர் தங்க ஏற்பாடு செய்கிறது. அவர்களுக்கு இரண்டு இல்லப் பணிப்பெண்கள் கவனித்துக் கொள்வார்கள். - படம்: ரெட் கிரவுன்ஸ் சீனியர் லிவிங்

ஒரே வீட்டை பகிர்ந்துகொள்ளும் முதியோர்களின் பராமரிப்புக்கு ஒரு வெளிநாட்டு பணிப்பெண் கூடவே இருக்கும் சாத்தியம் குறித்து அரசாங்கமும் தனியார் அமைப்புகளும் இணைந்து ஆராய்ந்து வருகின்றன.

தற்போது இதற்கு அனுமதியில்லை. இது, வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தை மீறுவதாகும்.

வெளிநாட்டுப் பணிப்பெண்ணின் உணவு, பாதுகாப்பு, மருத்துவ பராமரிப்பு, தங்குமிடம், ஓய்வு ஏற்பாடு ஆகியவற்றுக்கு முதலாளிகளே பொறுப்பு ஏற்க வேண்டும் என்கிறது தற்போதைய சட்டம்.

இந்த நிலையில் ‘ரெட் கிரவுன்ஸ் சீனியர் லிவிங்’ என்ற நிறுவனம் முதல் முறையாக முதியோர் பகிர்ந்துகொள்ளும் வாடகை வீட்டில் உடன் தங்கியிருக்கும் பணிப்பெண் சேவைகளை வழங்கவிருக்கிறது.

இந்தச் சமூக அமைப்பு, வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தை மீறுகிறதா என நான்கு மாதங்களாக மனிதவள அமைச்சு ஆராய்ந்த பிறகு புதிய பணிப்பெண் சேவை சோதனை முறையில் தொடங்கப்படுகிறது.

ஒரே வீட்டில் தங்கியுள்ள இரு முதியோருக்கு ‘ரெட் கிரவுன்ஸ் சீனியர் லிவிங்’ இச்சேவையை வழங்கவிருக்கிறது.

சுகாதார அமைச்சு, ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (ஏஐசி) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பகிரப்படும் உடன் தங்கும் மூத்தோர் பராமரிப்புச் சேவைகள் எனும் அந்த அரசாங்கத் திட்டத்தில் ஐந்து அமைப்புகள் தொடக்கமாக இணைந்துள்ளன.

ரெட் கிரவுன்ஸ் அவற்றில் ஒன்று. செயின்ட் பெர்னாடெட் அசிஸ்டட் லிவிங், இக்கான் ஹெல்த் அண்ட் வெல்னஸ், ஆக்டிவ் குளோபல் ரெஸ்பைட் கேர், டிஎஸ் கேர் சர்வீசஸ் ஆகியவை இதர நான்கு நிறுவனங்கள்.

ஒழுங்குமுறை சோதனை முறை என்பது தொழில்துறையுடன் ஆரம்பத்தில் பணியாற்றுவதன் மூலம் புதுமையான சேவைகளை நன்கு புரிந்துகொள்வதற்கான ஒரு முயற்சியாகும் என்று சுகாதார அமைச்சின் இணையப் பக்கம் தெரிவிக்கிறது.

இது, புதுமையான தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஆதரிப்பதற்கான பயனுள்ள, திறமையான மற்றும் பொருத்தமான வழிகளை அரசாங்கம் மதிப்பாய்வு செய்ய உதவும்.

மூத்தோர் பராமரிப்புக்கு மாற்று வழிகளில் தனியார் துறை எப்படி சேவைகளை வழங்கலாம் என்பது குறித்து தனியார் நிறுவனங்கள், மூத்தோர், பராமரிப்பாளர்களின் கருத்துகளை சுகாதார அமைச்சு அறிந்துவருகிறது.

குறிப்புச் சொற்கள்