உலகின் மற்ற இடங்களில் நடைபெறும் போர்கள் இங்கு பிரிவினையை ஏற்படுத்தி, இன, சமய ஒற்றுமையை பாதிக்க அனுமதிக்கக்கூடாது என்று அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாட்டாளிக் கட்சி உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.
மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்துக்கு இடையே நடக்கும் போர் தொடர்பான நாடாளுமன்ற தீர்மானத்தில் அரசாங்க, பாட்டாளிக் கட்சி உறுப்பினர்கள் மேற்கண்டவாறு கருத்துக் கூறினர்.
நாடாளுமன்றத் தீர்மானம் மீது பேசிய வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சீரான, தெளிவான வெளியுறவுக் கொள்கை உள்நாட்டு ஒற்றுமை, கருத்திணக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைகிறது என்றார்.
இதன் தொடர்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங், சிங்கப்பூரின் பல இன, பல சமய அமைதி, ஒற்றுமையை பாதிக்க அனுமதிக்கக்கூடாது என்று கூறினார்.
இதே கருத்தைக் கூறிய மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்தனர்.
மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்துக்கு இடையே நடைபெறும் போர் குறித்து 15க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமையன்று உரையாற்றினர்.
விவாதத்தில் பங்கேற்ற துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூர் நலன்களை கட்டிக்காக்க வேண்டும் என்றும் வெளிநாடுகளில் நடப்பவை நம்மைப் பிரிவினைக்கு இட்டுச் செல்லக்கூடாது என்றும் விளக்கினார்.
வெகு தொலைவில் நடக்கும் போர்கூட சமூக ஊடகத்தால் உணர்ச்சிகளை தூண்டிவிடக்கூடிய அபாயம் உள்ளது என்றும் இது வெகு எளிதாக கட்டுக்கடங்காமல் போய்விடக்கூடும் என்றும் திரு வோங் எச்சரித்தார். சிங்கப்பூர் உயிர்ப்பித்திருக்க அவசியமான கோட்பாடுகளை கட்டிக்காக்கும்படி மன்ற உறுப்பினர்களை திரு வோங் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரர்கள் சமய அடிப்படையில் அரசியல் பிரச்சினையை அணுகக்கூடாது. மாறாக, இது ஒரு மனிதாபிமான பிரச்சினை என்பதை லாரன்ஸ் வோங் நினைவூட்டினார்.
இது பற்றிப் பேசிய தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினரான லியோங் மன் வாய், அனைத்து சமூகங்களையும் சேர்ந்த சிங்கப்பூரர்கள் இதில் கவனமாக, குறிப்பாக இணையத்தளங்களில், தங்கள் கருத்துகளை பதிவு செய்யும்படிக் கூறினார்.

