‘டான் சோங் கார் சவால்’ போட்டியில் 17 மணி நேரம் காரை ஒரு கையால் தொட்டுக்கொண்டிருந்த பொறியாளரான சான் கோக் செங், சோர்வின் உச்சக்கட்டத்தில் இருந்தபோது போட்டியிலிருந்து விலக முடிவு செய்தார்.
ஆனால் அன்பும் தியானமும் அவரைக் கட்டிப்போட்டதால் 30 மணி நேரம் வரை காரை தொடர்ந்து தொட்டுக் கொண்டிருந்தார்.
கொளுத்தும் வெயிலில் வியர்வைச் சொட்ட சொட்ட காரை விடாமல் தொட்டுக்கொண்டிருப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் திரு சான் தனது மனைவி மீது வைத்திருந்த அன்பால் தன்னையும் மறந்து காரை விடாமல் தொட்டுக் கொண்டிருந்தார்.
“விட்டுவிடலாம் என்று ஏறக்குறைய முடிவு செய்தபோது அதற்கு முன்பு என்னை ஒருமுறை எனது மனைவி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இரண்டாவது நாளில் 11.00 மணியளவில் என் மனைவி வந்ததும் எனக்கு மீண்டும் புத்துயிர் கிடைத்தது,” என்றார் திரு சான்.
மனம் சோர்வடையும்போதெல்லாம் அவர் ஒன்று முதல் 100 வரை எண்ணி மூச்சுவிட்டு தியானம் செய்தார்.
“அமைதிப்படுத்திக் கொள்ளவும் என்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் தியானம் உதவியது,” என்று ‘அல்ட்ராசோனிக்’ தொழிற்துறையில் வேலை பார்க்கும் திரு சான் கூறினார்.
அவரது விடாமுயற்சிக்கு பலன் இல்லாமல் இல்லை. ஏறக்குறைய முப்பது மணி நேரம் தொட்டு நின்று $105,300 மதிப்புள்ள ‘நிசான் கிக்ஸ் இ-பவர் பிரிமியம் அட்வன்சர் சீரிஸ்’ காரை வென்றார்.
இதில் வாகன வாங்குரிமைச் சான்றிதழ் கட்டணம் சேர்க்கப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
“எனது மனைவி மகிழ்ச்சியில் கண்ணீர்விட்டு அழுதார்,” என்று 27 வயது மகன், 24 வயது மகளின் தந்தையான சான் சொன்னார்.
2002ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தச் சவால் போட்டியில் ஆக வயதானவர் வெல்வது இது இரண்டாவது முறையாகும். அப்போது சுபாரு கார் சவால் என்று அழைக்கப்பட்டது. இதற்கு முன்பு 58 வயதானவர் வெற்றி பெற்றுள்ளார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்தச் சவால் போட்டி கடைசியாக 2019ஆம் ஆண்டில் நடைபெற்றது.
அதன் பிறகு கடந்த சனிக்கிழமை நீ ஆன் சிட்டி சிவிக் பிளாசாவில் பிற்பகல் ஒரு மணிக்குத் தொடங்கியது.
நேரம் காலம் பார்க்காமல் யார் ஒருவர் காரை ஒரு கையால் தொட்டுக் கொண்டிருக்கிறார்களோ அவருக்கு விலைமதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் ஐந்து நிமிட நேரம் ஓய்வளிக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் 82 மணி நேரம் 16 நிமிடம் என்பது இந்தச் சவாலின் சாதனையாக உள்ளது.

