தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரினா பே சேண்ட்சின் 665,500 வாடிக்கையாளர் விவரங்களில் ஊடுருவல்

2 mins read
df3a03a1-132d-484b-b317-b563ce9030d5
வாடிக்கையாளர் விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை என்று மரினா பே சேண்ட்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மரினா பே சேண்ட்ஸ் வாடிக்கையாளர் வெகுமானத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஏறக்குறைய 665,500 உறுப்பினர்களின் சொந்த விவரங்களில் ஊடுருவல் நடந்துள்ளது.

அக்டோபர் 19, 20 தேதிகளில் இணையப் பாதுகாப்பில் ஊடுருவல் நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

அக்டோபர் 20ஆம் சம்பவம் பற்றி அறிய வந்ததாகவும் அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சேண்ட்ஸ் லைஃப்ஸ்டைல் உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள மின் அஞ்சலில் ஒருங்கிணைக்கப்பட்ட சூதாட்டக் கூடத்தை நடத்திவரும் மரினா பே சேண்ட்ஸ் தெரிவித்துள்ளது.

“ஊடுருவல் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதும் எங்களுடைய குழு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை எடுத்தது. விசாரணையில் கேசினோ வெகுமானத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள 665,000 வாடிக்கையாளர் தரவுகளில் மூன்றாம் தரப்பினர் ஊடுருவியது தெரிய வந்தது. வாடிக்கையாளர்களின் தரவுகளை அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பு தவறாகப் பயன்படுத்தியதா என்பது தெரியவில்லை,” என்று அந்த மின் அஞ்சலில் மெரினா பே சேண்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி பால் டவுன் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நாள் வரை அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பு தரவுகளை தவறாகப் பயன்படுத்தியதற்கு ஆதாரம் இல்லை என்றும் மின் அஞ்சல் தெரிவித்தது.

இதற்கிடையே ஊடுருவல் சம்பவம் குறித்து உரிய அதிகாரிகளிடம் மரினா பே சேண்ட்ஸ் புகார் தெரிவித்துள்ளது.

வெளி இணையப் பாதுகாப்பு நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டு தங்களுடைய கணினி கட்டமைப்பை வலுப்படுத்தி வருவதாகவும் திரு டவுன் தெரிவித்தார்.

ஆனால் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவர் விவரிக்கவில்லை.

இந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் இருக்கிறதா என உறுப்பினர்கள் தங்கள் கணக்கைக் கண்காணிக்கவும், மறைச் சொற்களை தவறாமல் மாற்றவும், அத்துடன் போலி இணையத் தளங்களில் விழிப்புடன் இருக்கவும் அவர் கேட்டுக் கொண்டார்.

குறிப்புச் சொற்கள்