தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகின் ஆகத் திறன்மிக்க ஊழியரணிகளில் சிங்கப்பூரும் ஒன்று: ஆய்வு

2 mins read
f46f1512-dd72-4a60-acf5-3665fdd899a1
உலகளாவிய அறிவுத்திறன்கள் தகுதி நிலையில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்தது. தொழில் மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் தகுதி நிலையில் மூன்றாம் இடம் கிடைத்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஊழியரணி, நிர்வாகம், தொழில், தொழில்நுட்ப திறன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் மிகவும் திறன்மிக்க ஊழியரணி என்று அண்மைய அறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரெஞ்சு வணிகப் பல்கலைக்கழகமான ‘இன்சியாட்’, டெஸ்கரேட்ஸ் கல்விக்கழகத்துடன் இணைந்து அந்த ஆண்டு அறிக்கையை வெளியிட்டது.

திறனாளர்களை ஈர்ப்பது, ஆதரவு கொடுப்பது, மேம்படுத்துவது, தக்கவைத்துக்கொள்வதுடன், ஊழியர்களின் தொழில்நுட்பத் திறன், உலகளாவிய அறிவு ஆகியவற்றின் அடிப்படைகளின்கீழ் 134 நாடுகளில் ஆய்வை மேற்கொண்டது ‘இன்சியாட்’.

இந்த ஆய்வில் சிங்கப்பூர் ஆறு தகுதிநிலைகளில் நான்கில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்தது.

உலகளாவிய அறிவுத்திறன்கள் தகுதி நிலையில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்தது. தொழில் மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் தகுதிநிலையில் மூன்றாம் இடம் பிடித்தது.

நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்றது சிங்கப்பூர். கடந்த ஆண்டும் இந்தத் தரநிலையில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் வந்தது. முதலிடத்தை சுவிட்சர்லாந்து தக்கவைத்துக்கொண்டது.

சிங்கப்பூர் ஆகத் திறன்மிக்க ஊழியரணியாகத் திகழ்வதற்கு முக்கியக் காரணம் அதன் உலகத்தரம் வாய்ந்த கல்விக் கட்டமைப்புதான் என்று இன்சியாடின் புரூனோ லான்வின் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் சிங்கப்பூரின் பலவீனமாகக் குறிப்பிடப்பட்டது திறமையைத் தக்கவைத்துக்கொள்ளும் திறன். அதில் சிங்கப்பூருக்கு 38வது இடம்தான் கிடைத்தது.

இதற்கு முக்கியக் காரணம் சிங்கப்பூரின் சிறிய பொருளியல் என்று லான்வின் கூறினார்.

பெரிய பொருளியல் நாடுகளில் வேலை வளர்ச்சி வேகமாக முன்னேற்றம் அடையும் என்று ஊழியர்கள் கருதுகின்றனர். அதனால், சிறிய பொருளியல் நாடுகளில் திறமையைத் தக்கவைத்துக்கொள்வதில் சிக்கல் இருப்பதாக லான்வின் குறிப்பிட்டார்.

இருப்பினும், சிங்கப்பூர் தொடர்ந்து ஊழியர்களைக் கவர்ந்து வருவதால் ஊழியரணியில் அது வளர்ச்சி பெற்றுக்கொண்டே இருப்பதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்