அரசாங்க வாடகை வீடுகள் 10ல் ஒன்பதில் நால்வர் அல்லது அதற்கும் குறைவானோர் வசிப்பதாக தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பொதுவாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) வாடகைக்கு விடும் வீடுகள் ஓரறை, ஈரறை வீடுகள்.
இது குறித்த ஒத்திவைப்பு தீர்மானம் தொடர்பில் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கேரி டான் கேள்விகளை எழுப்பியபோது டாக்டர் ஃபைஷால் பேசினார். அரசாங்க வாடகை வீடுகளைக் கட்டும்போது குறைந்த வருமானக் குடும்பங்களை மேம்படுத்தி அவற்றின் நிதி நிலவரத்தைச் சீர்படுத்தும் நோக்குடன் வீட்டில் அமைத்துத் தரப்படும் இடம் போன்ற அம்சங்களைக் கருத்தில்கொள்ளுமாறு திருவாட்டி கேரி டான் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினராகத் தான் வீடுகளுக்குப் போகும்போது பல வேளைகளில் ஈரறை வீடுகளில் மூன்று, நான்கு, ஐந்து பிள்ளைகள்கூட இருக்கும் குடும்பங்கள் வசிப்பதைக் கண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். தங்கும் வசதிகள், மழலையர் வளர்ச்சியில் அவை ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றை ஆராயுமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.
சிறிய வீடுகளில் அதிகமானோர் வசித்தால் குடும்பத்தாரிடையே கிருமிப்பரவல் அதிகரிக்கலாம் என்று திருவாட்டி டான் சுட்டினார். நிறுவனங்களில் வேலை மாற்றம் அடிக்கடி இடம்பெறுவது, மாணவர்கள் அடிக்கடி பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது ஆகியவற்றுக்கு சுகாதாரப் பிரச்சினைகள் காரணம் என்பதை அவர் விவரித்தார்.
திருவாட்டி டான் முன்வைத்த இதுபோன்ற அக்கறைகளுக்குப் பதிலளித்த டாக்டர் ஃபைஷால், இளம் பிள்ளைகள் இருக்கும் சற்று பெரிய குடும்பங்களுக்குக் கூடுதல் வசதியான சூழலை உருவாக்கிக் கொடுக்கும் முயற்சிகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் எடுத்து வருவதாகச் சொன்னார். கூடுதல் இடம் உள்ள ஈரறை வாடகை வீடுகளை அமைத்துத் தருவது அவற்றில் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவ்வாறு அமைத்துத் தரப்படும் கூடுதல் இடத்தை சிறுவர் அறை போன்றவையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று டாக்டர் ஃபைஷால் கூறினார்.
பழைய வாடகை வீடுகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன; வாடகை வீடுகளில் வசிப்போர் இடம் மாற்றப்படும்போது மேம்பட்ட வடிவமைப்பைக் கொண்ட புதிய வாடகை வீடுகளில் வசிக்கலாம் என்றும் அவர் சுட்டினார்.

