சிங்கப்பூரரான ஏமஸ் யீ அமெரிக்காவில் ஒரு மாத கால பரோலை முடித்துக் கொண்டு மீண்டும் சிறைக்குத் திரும்பியிருக்கிறார்.
அக்டோபர் 7ஆம் தேதி வரை அவருக்கு பரோல் வழங்கப்பட்டிருந்தது. 2026ஆம் ஆண்டில் அவரது சிறைத் தண்டனை முடிகிறது.
தற்போது இல்லினாய்ஸ் மாநிலச் சிறையில் உயர் பாதுகாப்பு உள்ள ஸ்டேட்வில் சீர்திருத்த நிலையத்தில் ஏமஸ் யீ வைக்கப்பட்டுள்ளார் என்று சிறைக் கைதிகளின் நிலைப் பற்றி தகவல்களை வெளியிடும் ‘வைன்லிங்’ செயலி தெரிவிக்கிறது.
அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவதற்கான காரணம் தெரியவில்லை.
பரோலில் இருந்தபோது ஏமஸ் யீ, 25, இரண்டு வலைப் பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
அக்டோபர் 23ஆம் தேதி வெளியிட்ட முதல் பதிவில் சிறை வாழ்க்கை, பரோலுக்கான நிபந்தனைகள், சிங்கப்பூருக்குத் திரும்ப விரும்பும் தனது விருப்பம் ஆகியவற்றைப் பற்றி எழுதியிருந்தார்.
நவம்பர் 5ஆம் தேதி ‘நான் செய்ய விரும்பும் ஆறு விஷயங்கள்’ என்ற தலைப்பில் மற்றொரு பதிவை அவர் வெளியிட்டிருந்தார்.
முன்னதாக, ஒரு பதின்ம வயது பெண்ணைத் தனது விருப்பத்தின்பால் நடக்க வைத்தது, குழந்தைகளின் ஆபாசப் படங்களை வைத்திருந்தது ஆகியவற்றுக்காக அவருக்கு நடுத்தர பாதுகாப்புக் கொண்ட இல்லினாய்ஸ் மாநிலச் சீர்திருத்த நிலையத்தில் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
2019 பிப்ரவரியில் யீ குற்றச் செயல்களைப் புரிந்தார். அப்போது டெக்சஸில் வசித்த 14 வயது பெண்ணிடம் நிர்வாணப் புகைப்படங்களைக் கேட்டு அவர் பலமுறை வற்புறுத்தினார்.
அந்தப் பெண்ணுடன் பாலியல் குறும்பு விளையாட்டுகளிலும் அவர் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து 2020 அக்டோபரில் அவர் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரில் 2016 டிசம்பரில் அவர் தேசிய சேவையை ஆற்ற வேண்டும். ஆனால் மருத்துவ சோதனைக்குச் செல்வதற்கு ஒரு நாள் முன்பு அவர் அமெரிக்கா சென்றுவிட்டார். இதற்காக ஏமஸ் யீ சிங்கப்பூரில் சிறைத் தண்டனையை எதிர்நோக்குகிறார்.
சிங்கப்பூரில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைச் சுட்டிக்காட்டி, அரசியல் கருத்துகளுக்காக தான் துன்புறுத்தப்பட்டதாகக் கூறியதால் 2017ல் அமெரிக்கா அவருக்கு அரசியல் தஞ்சம் வழங்கியது.
2015ஆம் ஆண்டில் யூடியூப்பில் அவர் வெளியிட்ட காணொளியில் கிறிஸ்துவர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபட்டதாகவும் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ தொடர்பான ஆபாசப் படத்தை வெளியிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு நான்கு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டே, கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாமிய சமயங்களை இழிவுபடுத்தும் காணொளிகளையும் வலைப்பதிவுகளையும் வேண்டுமென்றே வெளியிட்டதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு ஆறு வாரச் சிறைத்தண்டனையும் $2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

