நீதிமன்ற அவமதிப்பு குற்றம்: எம்.ரவிக்கு சிறை

2 mins read
6ab4478c-43a0-4aba-9be2-391c27ffea92
நீதிபதிகளை அவமதித்த குற்றங்களுக்கு எம்.ரவி பலமுறை இடைநீக்கம், அபராதம் போன்ற தண்டனைகள் பெற்றுள்ளார். - கோப்புப் படம்

கடந்த 2021ல் நவம்பர் மாதத்தில் இரண்டு நீதிபதிகளை அவமதிப்பு செய்த குற்றத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள வழக்குரைஞர் எம்.ரவிக்கு புதன்கிழமை (நவம்.8 ) 21 நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பலமுறை நீதிபதி அட்ரி லிம்மை பாரபட்சமானவர், மறியாதையற்றவர் என்று குறிப்பிட்டதுடன், அவர் பேசும்போது குறுக்கிட்டுள்ளார் ரவி. உயர்நீதிமன்றத்தில் முன்னாள் பேருந்து ஓட்டுநர் சுவா குவோங் மெங் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தை எதிர்த்துத் தொடுத்த வழக்கில் வாதாடியபோது ரவி இக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.

ஒரே நாள் காலையில் இரண்டு வழக்கு விசாரணைகளில் ஏன் ஈடுபட்டுள்ளீர்கள் என்று வட்டார நீதிபதி செ யுவன் ஃ பாட்டின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவரையும் பாரபட்சமானவர் என்று குற்றம்சாட்டினார் ரவி. ஆவணங்களில் மோசடி செய்த குற்றத்திற்கு மலேசியரான மகேந்திரன் முனியாண்டி என்பவருக்காக வாதாடியபோது ரவி அந்த நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தைச் செய்துள்ளார்.

கடந்த 2023 மார்ச் 31ல், எம்.ரவி புரிந்த ஒன்பது அவமதிப்புக் குற்றங்களும் நிரூபணமாயின என்று நீதிபதி ஹூ ஷியாவ் பெங், தீர்ப்பளித்திருந்தார்.

தமது தற்காப்பு வாதமாக, நீண்டநாள் மனநலப் பிரச்சினையும், சம்பவத்தன்று மருந்துகள் உட்கொள்ளாததையும் காரணங்களாக ரவி சுட்டியிருந்தார்.

தற்காப்பு வாதத்தின்போது அடிக்கடி அவ்வாறு நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது எனவும் சுய கட்டுப்பாட்டை இழக்கும் அளவுக்கு ரவியின் மருத்துவ, மனநலப் பிரச்சினைகள் இல்லை என்றும் தீர்ப்பு வழங்கும்போது, நீதிபதி ஹு கூறினார்.

முன்பு செய்யப்பட்ட இதேபோன்ற குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட இடைநீக்கங்கள், அபராதங்கள் போன்றவை ரவியின் நடத்தையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் நீதிபதி குறிப்பிட்டார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் சவுத் பிரிட்ஜ் சாலையில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் வாசலில் ஒரு பெண்ணை இடது கன்னத்தில் அறைந்த குற்றத்துக்கும் அதற்கு முன்னதாக பகோடா சாலையில் ஒரு ஆடவரை தகாத வார்த்தைகளில் திட்டியதற்கும் எம்.ரவி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அச்சம்பவங்களுக்குப் பின்னர் அவர் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தலைமை நீதிபதி, அரசாங்க வழக்குரைஞர்கள், சட்டத்துறை சங்கம் ஆகியோரை அவமதித்த குற்றத்துக்கு வழக்குரைஞர் பொறுப்பிலிருந்தும் எம்.ரவி, தற்போது அதிகபட்ச தண்டனையாக ஐந்து ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்