காவல்துறை கேன்டோன்மென்ட் வளாகத்தில் (பிசிசி) ஒரு பெண் தன் காதலருடன் இருந்திருக்கிறார். காதலரைப் பிணையில் விடுவிப்பதன் தொடர்பில் இருவரும் அங்கிருந்தனர்.
அப்போது விதிமுறைகளை மீறி அப்பெண் காதலர் உள்ள காட்சிகளைக் காணொளிகளில் பதிவிட்டார்.
இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் அவர் காணொளிகளைப் பதிவிட்டார்.
உள்கட்டமைப்புப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் காவல்துறை கேன்டோன்மென்ட் வளாகம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அப்படியிருந்தும் 33 வயது சிட்டி ஸுலாய்க்கா ஏ. ரகுமான் என்ற பெண், இவ்வாண்டு ஜூலை 13ஆம் தேதியன்று தன் காதலர் முகம்மது ஹெய்ரிஸால் கமார்ஸமான் தகாத சைகை செய்ததைக் காணொளியில் பதிவிட்டார். காதலர் அந்தக் காணொளியை டிக்டாக் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தார்.
இது, சிட்டி சட்டவிரோதமாகப் பதிவிட்ட காணொளிகளில் ஒன்று. இரண்டாவது காணொளி ஆகஸ்ட் ஒன்றாம் தேதியன்று பதிவுசெய்யப்பட்டது. அதுவும் டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
உள்கட்டமைப்புப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தன்மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை சிட்டி ஒப்புக்கொண்டார்.
41 வயது ஹெய்ரிஸால், தன் காதலியைத் தாக்கியது உட்பட பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அவர்மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.