தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நவம்பர் 10 முதல் வாக்காளர் பதிவேட்டில் மீண்டும் பெயர்களைப் பதிந்துகொள்ளலாம்

2 mins read
e38c9c93-2d0a-46cb-ac6a-9b26251bc8da
நொவீனா ரைஸிலுள்ள தேர்தல் துறை அலுவலகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செப்டம்பர் 1 அன்று நடந்த அதிபர் தேர்தலில் வாக்களிக்கத் தவறிய சிங்கப்பூரர்கள் வெள்ளிக்கிழமை முதல் (நவம்பர் 10) வாக்காளர்கள் பதிவேட்டில் தங்கள் பெயர்களை மீண்டும் பதிந்துகொள்ள விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பெயர்களை மீண்டும் பதிந்துகொள்ள இணையத்தில் பதிவு செய்யலாம். அல்லது அருகிலுள்ள சமூக நிலையம் அல்லது மன்றம், எஸ்ஜிசேவை நிலையங்கள் அல்லது தேர்தல் துறை அலுவலகம் ஆகியவற்றில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

நேரில் விண்ணப்பிக்க விரும்புவோர், இணையத்தளம் வழியாக அல்லது 1800 225 5353 என்ற எண்ணில் தேர்தல் துறையில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

வெளிநாடுகளில் வாழும் சிங்கப்பூரர்கள், வெளிநாட்டுப் பதிவு மையங்களாகச் சேவையாற்றும் சிங்கப்பூர் வெளிநாட்டுத் தூதரகங்களில் விண்ணப்பிக்கலாம்.

அதிபர் தேர்தல் சட்டத்தின் கீழ், செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தல் அல்லது 2020 பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தவறியவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பதிவேட்டில் இருந்து நீக்கப்படும். அடுத்த தேர்தலில் வாக்களிக்க அவர்கள் மீண்டும் பெயர்களைப் பதிந்துகொள்ள விண்ணப்பிக்க வேண்டும்.

இவர்கள் தேர்தல் துறையிடம் ஒரு கடிதத்தைப் பெறுவார்கள். சிங்பாஸ் செயலி வழியாக ஒரு அறிவிப்பையும் பெறுவார்கள் என்று தேர்தல் துறை கூறியது.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு தேர்தல் துறை கேட்டுக்கொண்டது. அப்போதுதான் அவர்களால் அடுத்த தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று அது குறிப்பிட்டது. சட்டப்படி, தேர்தலுக்கான உத்தரவு வெளியிடப்பட்டவுடன் தேர்தல் துறையால் பெயர்களை மீண்டும் பதிந்துகொள்ள முடியாது.

குறிப்புச் சொற்கள்