அடுத்த முறை ரயில் நிலையத்தில் அல்லது ரயிலில் பயணம் செய்யும்போது இனிய மணியோசை கேட்டால் ஆச்சரியம் அடையாதீர்கள்.
வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு மற்றும் வட்டப் பாதைகளில் ரயில் வரும்போது அல்லது புறப்படும்போது குறிப்பிட்ட எம்ஆர்டி நிலையங்களிலும் ரயில்களிலும் உள்ளூரின் பிரபல இசையை அடிப்படையாகக் கொண்ட புதிய மணியோசை ஒலிக்கப்படுகிறது.
உடல் ஊனமுற்றோர் உட்பட அனைவரையும் உள்ளடக்கும் விதமாக ரயில் பயணத்தில் இனிய அனுபவங்களைத் தரும் நோக்கத்தோடு எஸ்எம்ஆர்டி இந்த அண்மைய முயற்சியை எடுத்துள்ளது.
அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கப்பட்ட இம்முயற்சி அடுத்த மூன்று மாதங்களுக்கு நடப்பில் இருக்கும்.
“குறிப்பாக பார்வையற்றவர்களுக்கு ரயில் பயணத்தின் மூலம் இனிய அனுபவத்தை வழங்க விரும்புகிறோம்,” என்று எஸ்எம்ஆர்டி தலைவர் லாம் ஷியாவ் காய் தெரிவித்தார்.
மெல்லிய மணியோசையை ஒலிப்பதற்காக லாப நோக்கற்ற சிங்கப்பூரர்களின் கலை நிறுவனமான ‘த டெங் கம்பெனி’ உடன் கூட்டு சேர்ந்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.
டிக்டாக்கின் adiel_rusyaidi எனும் பயனீட்டாளர் திங்களன்று புதிய கலகலவென ஒலிக்கும் மணியோசையைப் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
இதர நாடுகளின் ரயில்களில் ஒலிக்கப்படும் மணியோசையைப் போல இங்கும் ஒலிப்பதுகேட்டு பலரும் ரசிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
“நான் இப்போதுதான் ஒசாகாவிலிருந்து திரும்பியிருக்கிறேன். ஜப்பானில் உள்ளது போலவே இந்த மணியோசை கேட்கிறது. எஸ்எம்ஆர்டியின் மனதைத் தொடும் இம்முயற்சி பிடித்திருக்கிறது,” நன்றாக செய்துள்ளீர்கள்,” என்று பயனீட்டாளர் ஒருவர் பாராட்டியிருந்தார்.