பதற்றத்தில் குஞ்சுகளுடன் சாலையைக் கடக்க முயன்ற கோழிக்கு உதவிய ஊழியரின் செயல் அவருக்குப் பெருமை சேர்த்துள்ளது. அந்தக் காணொளிக் காட்சி ரோட்ஸ்.எஸ்.ஜி. (Roads.sg ) எனும் ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றப்பட்டு, 122,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
நான்கு குஞ்சுகளுடன் பாதை தவறிய தாய்க்கோழி வழிதெரியாமல் கென்டோன்மன்ட் லிங்க் சாலைச் சந்திப்பில் பரிதவிப்பதை அந்தப் பதிவில் காணமுடிந்தது.
அதனைப் பார்த்த ஊழியர் ஒருவர், இரு கைகளையும் விரித்தபடி கோழிக் குஞ்சை நெருங்கினார். அப்போது கோழிக் குஞ்சுக்கு ஆபத்து என்று எண்ணி கோழி சிறகை வேகமாக அசைத்து அவரைத் தாக்கி விரட்ட முயன்றது. அவர் தலையில் கட்டுமானத்தளத்தில் பயன்படுத்தும் தொப்பியும் நீல நிற மேலாடையும் அணிந்திருந்தார். அந்த நேரத்தில் மற்ற 3 கோழிக் குஞ்சுகள் முன்னே சாலையைக் கடந்துவிட்டன. மிஞ்சிய கோழிக் குஞ்சை ஊழியர் கையில் எடுத்தார். நல்லெண்ணத்துடன்தான் அவர் நெருங்குகிறார் என்று உணர்ந்த தாய்க்கோழி முன்னே சென்றது. ஊழியர், சாலையைக் கடந்து புல்தரையில் கோழிக் குஞ்சை விட்டார். கோழி குடும்பமாக அங்கிருந்து தங்கள் பாதையில் சென்றுவிட்டன.
இந்தக் காணொளியைப் பார்த்த பலர் ஊழியரின் செயலைப் பாராட்டியுள்ளனர். தாய்க்கோழி குஞ்சுகளை காப்பதில் தீவிரம் காட்டியதும் ஊழியரின் கருணை இயற்கையின் மேன்மையை உணர்த்தியுள்ளது. ஆயினும் சிலர், கோழியும் குஞ்சுகளும் எப்படி பரபரப்பான சாலைப் பகுதிக்கு வந்தன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

