ஃபேர்பிரைஸ் பேரங்காடி ஊழியர்களுக்கு லஞ்சம்;கடலுணவு நிறுவன முதலாளிக்குச் சிறை

ஃபேர்பிரைஸ் பேரங்காடி ஊழியர்களுக்கு லஞ்சம்;கடலுணவு நிறுவன முதலாளிக்குச் சிறை

2 mins read
5e7989ce-3c85-44ba-889b-cf9e9d7fc22f
ஃபேர்பிரைஸ் ஊழியர்கள் இருவரை நண்பர்களாக்கி ஆதாயம் தேடிய முதலாளிக்குச் சிறை. - கோப்புப் படம்: தமிழ் முரசு

சிங்கப்பூரின் பிரபல பேரங்காடிகளில் ஒன்றான ஃபேர்பிரைசில் பணியாற்றும் இரண்டு ஊழியர்களை நண்பர்களாக்கி அவர்களுக்கு குறைந்தது 2,540 வெள்ளி லஞ்சமாக செலவு செய்த கடலுணவு ஊழியர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கியாங் ஹுவாட் கடலுணவு நிறுவனத்தின் லிம் வெய் ஜியான், 33 என்பவர் 2018, 2021க்கும் இடையே இரண்டு ஊழியர்களுக்கு பல்வேறு செலவுகளை செய்துள்ளார்.

வெள்ளிக் கிழமை அவருக்கு ஐந்து வாரச் சிறையும் ஐந்தாயிரம் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

எஞ்சிய 330 வெள்ளி தொடர்பான அவர் மீதான மூன்று குற்றச்செயல்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

கியாங் ஹுவாட் கடலுணவு நிலையத்தில் லிம் வெய் ஜியான் இயக்குநராக செயல்படுகிறார் எனத் தெரிகிறது. தனது நிறுவனத்தின் பொருள்களை விற்பதற்காக ஃபேர்பிரைஸ் பேரங்காடியின் முன்னாள் மூத்த அதிகாரியான லிம் கியான் கோக், சரக்குக் கிடங்கு காப்பாளர் சுவா டியோவ் ஹைம் ஆகிய இருவருக்கு அவர் பல்வேறு கட்டங்களில் விருந்து, உணவு, பானம் என செலவு செய்துள்ளார்.

2007ஆம் ஆண்டில் ஆண்ட்ரு என்று அழைக்கப்பட்ட லிம் கியான் கோக் ஜூரோங் மீன்பிடி துறைமுகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றினார். எந்த விநியோகிப்பாளரிமிருந்து கடலுணவு பொருள்களை வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அவருக்கு இருந்தது. 2017ஆம் ஆண்டில் மீன்பிடித் துறைமுகத்தில் லிம் வெய் ஜியான், ஆண்ட்ருவைச் சந்தித்தார். 2020 அக்டோபரில் ஆண்ட்ருவின் பிறந்த நாள் விருந்துக்கு அவர் தாராளமாக ஏறக்குறைய 2,000 வெள்ளி வரை செலவு செய்தார். மூன்று விஎஸ்ஓபி மதுபானம் பாட்டிலையும் அவர் வாங்கி வந்திருந்தார்.

விநியோகிப்பாளரிடமிருந்து சரக்குகளைப் பெறுவது ஃபேர்பிரைசில் பணியாற்றிய சுவாவின் பொறுப்பாகும். லிம் வெய் ஜியான் அவரையும் 2017ல் ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் நண்பராக்கிக் கொண்டார்.

ஜிம்மி என்று அழைக்கப்பட்ட சுவாவுக்கு 2021ல் அறுபது சமயங்களில் 210 வெள்ளி மதிப்புள்ள உணவு, குளிர்பானங்களை அவர் வாங்கி கொடுத்துள்ளார்.

லிம் தனது நிறுவனத்தின் உபரி மீன்களை ஜிம்மி ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் அவர் செலவு செய்துள்ளார்.

2023ஆம் ஆண்டில் இரண்டு ஃபேர்பிரைஸ் ஊழியர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டது. லிம் கியான் கோக்குக்கு லஞ்சம் பெற்றதற்காக மார்ச் மாதம் நான்கு ஆண்டுகள், ஐந்து மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. $290,000 அபராதம் வழங்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.

சுவாவுக்கு மே மாதம் ஐந்து வாரச் சிறைத் தண்டனையும் 2,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் 3,830 வெள்ளி அபராதம் வழங்கவும் அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

லிம் வெய் ஜியான் வெள்ளிக்கிழமை 10,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நவம்பர் 19ஆம் தேதி தண்டனையைத் தொடங்க அரசு நீதிமன்றத்தில் சரண் அடையுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்