$14.9 மி. கடன்: ‘ஃபிளாஷ் காப்பி’ நிறுவனம் மூடப்பட்டது

1 mins read
e9916973-2286-495c-ac27-85d564ace595
கடன் காரணமாக சிங்கப்பூரில் அதன் 11 கிளைகளையும் மூடியது ஃபிளாஷ் காப்பி. - படம்: தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஊழியர்களின் ஊதியமான $300,000 உட்பட, 120 கடனாளிகளுக்கு $14.9 மில்லியன் தரவேண்டிய காரணத்தால் ஃபிளாஷ் காப்பி (Flash Coffee) என்றழைக்கப்பட்ட நவீன காப்பி நிறுவனம் அதன் 11 கிளைகளையும் அக்டோபர் மாதத்தில் மூடியுள்ளது.

தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்காத ஊழியர்களைக் கொண்ட அந்நிறுவனம், மற்ற சந்தைகளில் வாய்ப்புகளைத் தேடுவதாக அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தின் 75 விழுக்காடு ஊதியத்துடன் அக்.12 வரையிலான ஊதியமும் ஊழியர்களுக்கு கொடுக்கப்படவேண்டியுள்ளது. அவர்கள் பயன்படுத்தாத விடுப்புநாள்களுக்கான ரொக்கமும் அதனுள் அடங்கும் என்று உணவு, பானம் மற்றும் சார்புத் தொழிலாளர்கள் சங்கம் (FDAWU) கடந்த அக்.13 அன்று கூறியது.

ஃபிளாஷ் காப்பி நிறுவனத்தின் கலைப்பை முறைப்படி நடத்துவதற்கு பிடிஓ சிங்கப்பூர் நிறுவனம் (BDO Singapore ) பொறுப்பேற்றுள்ளது. நிறுவனத்தின் சொத்து மதிப்பீடு நடந்துமுடிந்த பிறகே ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஊதியம் பற்றி கருத்து கூற முடியும் என்று பிடிஓ கூறியது. தென்கிழக்காசிய நாடுகளிலும் உலகின் மற்ற பகுதிகளிலும் ஃபிளாஷ் காப்பி 200 கிளைகளை நிர்வகித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்