சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அங்கம் வகிக்கும் ஆசிய பசிபிக் நாடுகளில் இயங்கும் 14 விமானச் சேவைகளை உள்ளடக்கிய ஆசிய பசிபிக் விமானச் சேவை சங்கம் (AAPA -அசோசியேஷன் ஆஃப் ஏசிய பசிபிக் ஏர்லைன்ஸ்) சுத்தமான நீடித்த நிலைத்தன்மையுடைய எரிவாயுவின் 5 விழுக்காடு பயன்பாட்டை 2030க்குள் எட்டுவதற்கு உறுதிமொழி எடுத்துள்ளன.
இது உறுப்பினர்கள் அனைவரின் ஒட்டுமொத்த இலக்கு என்று அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் சுபாஷ் மேனன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (நவம்.10) மாண்டரின் ஓரியன்டல் சிங்கப்பூரில் நடந்த சங்கத்தின் மூத்த அதிகாரிகள் சந்திப்பில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சில விமானங்கள் மற்ற சேவைகளைவிட நீடித்த நிலைத்தன்மையான எரிவாயுக் கலவைகளை அதிகமாகப் பயன்படுத்த நேரிடும்.
சங்க உறுப்பினர்களில் ஒன்றான கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ், அத்தகைய எரிவாயுவை 2030க்குள் 10 விழுக்காடு பயன்படுத்த முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேவையும் அதன் மலிவுக் கட்டண சேவையான ஸ்கூட் நிறுவனமும் 20 மாதச் சோதனை நடத்தியுள்ளதாக தலைமை நிர்வாகி கோ சூன் பொங், இதுகுறித்து கருத்துரைத்தார். மேலும் இந்த மாற்றத்தைச் செயல்படுத்தத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.