தீவு விரைவுச் சாலையில் சனிக்கிழமை காலையில் நிகழ்ந்த விபத்தில் இருவர் மாண்டனர்.
மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த அதன் 39 வயது ஓட்டுநரும் பின்னால் அமர்ந்திருந்த ஒன்பது வயது பிள்ளையும் விபத்தில் கடுமையாகக் காயம்பட்டு, பின்னர் மாண்டனர் என்று ஷின் மின் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையில், ஜாலான் பஹார் வெளிச்சாலைக்கு முன்பு விபத்து நிகழ்ந்தது என்று தங்களுக்கு காலை 10.10 மணிக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தனது மருத்துவ உதவியாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே அவ்விருவரும் மரணமுற்றதை உறுதிப்படுத்தியதாகவும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
சம்பவ இடத்தில் நீல நிறத்திலான இரண்டு கூடாரங்கள் தென்பட்டன என்றும் ஒரு லாரி சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்றும் ஷின் மின் செய்தி மேலும் தெரிவித்தது.
கடந்த புதன்கிழமை ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச் சாலையில், ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு லாரி, ஒரு சிற்றுந்து இவை மூன்றும் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் 27 வயது மோட்டார்சைக்கிளோட்டியான முகம்மது நுர்ஹில்மி அத்தான் மரணமுற்றார்.
இவ்விபத்து தொடர்பில் சிற்றுந்துப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது வெள்ளிக்கிழமையன்று, தனது முரட்டுச் செயலால் கடுமையான காயம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.