தனது வெளிநாட்டுக் கணவருக்கு உடனடியாக $50,000 பணம் பரிவர்த்தனை செய்யவேண்டும் என்று ஒரு 70 வயது மூதாட்டி யுஓபி வங்கியின் தெம்பனீஸ் கிளைக்கு செப்டம்பர் மாதத்தில் சென்றிருந்தார்.
இணையக் காதல் மோசடியில் மாது சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யுஓபி வங்கி மேலாளர் திரு டெனிதர் வோங், (முன்பின் அறிமுகமில்லாத) கணவரை திருமணம் செய்ததற்கான சான்றிதழையும் படங்களையும் காட்டும்படி கேட்டார். அவர்களின் திருமணம் வெளிநாட்டில் நடந்தது, ஆவணங்களும் படங்களும் கணவருடன் அங்குதான் உள்ளன என்று அம்மாது கூறியுள்ளார். இணையக் காதல் மோசடியில் ஏமாந்திருக்கலாம் என்று மாதிடம் விளக்கிய வங்கி மேலாளர், உடனடியாக காவல் துறையிடம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில் அந்த வெளிநாட்டு ஆடவர் மாதுக்கு அனுப்பிய செய்திகள் அனைத்தும் ஏமாற்றும் நோக்குடன் பொய் அன்பைப் பொழியும் விதமாக உள்ளதை மேலாளர் உணர்ந்தார்.
ஆரம்பத்தில் ஒத்துழைப்பு தந்த மாது, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆயினும் 2 வாரங்களுக்குப் பிறகு, மீண்டும் இரண்டாவது முறை, $3000 பணத்தை வெளிநாட்டுக்கு வேறு ஒரு கணக்குக்கு அனுப்பிவைக்க முயன்றுள்ளார். தன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கென அவர் கணவருக்கு அதை அனுப்பவேண்டியுள்ளது என்று வங்கியிடம் தெரிவித்துள்ளார். மாதின் பிறந்தநாள் வருடத்தின் சில மாதங்களுக்கு முன்பே நிகழ்ந்துவிட்டதை அறிந்திருந்த வங்கி, அவரது கணக்கை முடக்கியது.
அதனை அறிந்து ஆத்திரமடைந்த மாது, மேலாளருக்கு எதிராக வங்கி ஊழியர்களை அவமரியாதையுடன் பேசத் தொடங்கினார். பல வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும்போது கோபம் அடைந்து, அவர்களின் செய்கைகளை தற்காக்கும் விதத்தில் நடந்துகொள்கின்றனர். இருப்பினும் அவர்களை பல வழிகளில் வங்கி அதிகாரிகள் புரியவைக்க முயல்கின்றனர் என்று திரு வோங் கூறினார்.
மேற்குறிப்பிட்ட மாதின் தவறான செயலை உணரவைக்க ஒரு வாரத்துக்குமேல் தேவைப்பட்டது என்றும் வங்கி மேலாளர் வோங் தெரிவித்தார்.