கேலாங்கில் சண்டை; 32 வயது ஆடவர் கைது

கேலாங்கில் சண்டை; 32 வயது ஆடவர் கைது

1 mins read
4c2aacf4-fffa-41cb-869a-1829fef13e00
சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது. - கோப்புப் படம்
multi-img1 of 2

கேலாங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூண்ட சண்டையில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 32 வயது ஆடவர் ஒருவர், ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயம் விளைவித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

எண் 38 லோரோங் 25 கேலாங் அருகே நடந்த சண்டை குறித்து இரவு 8.15 மணியளவில் தங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.

சண்டையில் 46 வயது ஆடவர் ஒருவரும் சம்பந்தப்பட்டதாக சீன நாளிதழான சாவ்பாவ் கூறியது. சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்தபோது, ஆடவர்கள் இருவரும் சட்டையின்றி, காலணிகளின்றி காணப்பட்டனர்.

அந்த 32 வயது ஆடவர், மற்றோர் ஆடவரைக் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுவதாக சாவ்பாவ் குறிப்பிட்டது. கைவிலங்கிடப்பட்டு சாலையோரமாக அமர்ந்திருந்த அவரைக் காவல்துறை அதிகாரிகள் சூழ்ந்திருந்தனர். பின்னர் காவல்துறை வாகனத்துக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டனர்.

சண்டை மூண்டபோது அங்கு பெண் ஒருவரும் காணப்பட்டார். ஆனால், சண்டையிட்ட அவ்விரு ஆடவர்களுக்கும் அப்பெண்ணுக்கும் இடையேயான உறவு குறித்து தெரியவில்லை.

டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது அந்த 46 வயது ஆடவர் சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

இச்சண்டையின்போது மற்றொருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட மறுத்துவிட்டதாகவும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்