தங்ளின் ஹால்ட் கடைத் தொகுதியில் தமது வாழ்நாள் முழுவதும் முடி திருத்தும் தொழில் செய்துவந்துள்ள திரு அப்துல்லா லத்திப், 75, தற்பொழுது பெரும்பாலும் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே முடி திருத்தும் பணியில் ஈடுபடுகிறார்.
அங்கு வசித்து வந்த பலர் அவரிடம் முடி திருத்துவதற்காகவே வருகின்றனர். இவர்களில் சிலர் அந்தக் குடியிருப்புப் பேட்டைகளிலிருந்து வெளியேறிவிட்ட போதிலும் இவரிடம் முடி வெட்டிக்கொள்வதற்காகவே திரும்ப வருகின்றனர்.
“எனது பழைய வாடிக்கையாளர்கள் அனைவரும் என்னிடம் பாலர் பள்ளி நாளிலிருந்து முடி வெட்டிக் கொண்டவர்கள். இப்பொழுது இவர்களில் சிலர் தங்கள் பிள்ளைகளையும் என்னிடம் முடி வெட்டிக்கொள்ள அழைத்து வருகின்றனர்,” என்று உற்சாகமாகக் கூறுகிறார் தங்ளின் ஹால்ட் கடைத் தொகுதியில் புளோக் 48இல் சலோன் டி பென்ஸிமன் என்ற முடி திருத்தும் கடையை நடத்திவரும் அப்துல்லா.
குவீன்ஸ்டவுன் பகுதியின் மறுமேம்பாட்டுத் திட்டத்திற்காக வழிவிட உள்ள இங்கிருக்கும் புளோக்குகளிலிருந்து 2021ஆம் ஆண்டிலிருந்து மக்கள் வெளியேறத் தொடங்கியதை நினைத்து கவலையுடன் இருக்கிறார் திரு அப்துல்லா.
எனினும், திரு அப்துல்லா இங்கிருந்து வேறு இடத்திற்கு மாறாமல் தற்பொழுது அவரிடம் அன்றாடம் வரும் 10 வாடிக்கையாளர்களுக்கு பணி செய்கிறார். இதுவே 2019ஆம் ஆண்டில் தினமும் 30 வாடிக்கையாளர்கள் வரை வருவர் என்று இவர் தெரிவிக்கிறார்.
ஆனால், 2027ஆம் ஆண்டு தமது கடையை வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்கும் காலம் வரும்போது, அதன் பின் வேலைக்கு விடை கொடுக்கப் போவதாக இவர் விளக்கினார்.
அப்பொழுது வேலையிலிருந்து ஓய்வு பெறும் நாள் வந்துவிடும் என்று திரு அப்துல்லா கூறுகிறார்.
தங்ளின் ஹால்ட் குடியிருப்புப் பேட்டையின் புளோக் 47,48,49 ஆகியவை பேட்டையின் மறுமேம்பாட்டுக்கு வழிவிட உள்ளன. நவம்பர் மாத நிலவரப்படி, அங்கிருக்கும் 28 கடைகளில் 23 இன்னமும் செயல்பாட்டில் இருந்து வருவதாக கழகம் கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இங்கிருக்கும் கடைக்காரர்கள் தங்கள் குத்தகையை மார்ச் 2027ஆம் ஆண்டுவரை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று கழகம் கூறியுள்ளது. இந்த புளோக்குகள் அதற்குப் பின்னரே அகற்றப்படும் என்று கழகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர், இந்த கடைக்காரர்கள் தங்கள் கடைகளை மார்ச் 2024ஆம் ஆண்டு திருப்பித்தர வேண்டும் என்று கழகம் கூறியிருந்தது.
தங்ளின் ஹால்ட் குடியிருப்புப் பேட்டை கடந்த 2014ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டத்திற்காக அடையாளம் காணப்பட்டது.

