தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலி ‘வாட்ஸ்அப் வெப்’ மோசடியால் $606,000 இழப்பு

1 mins read
d1a1194b-fd68-4e03-bb82-6e39e7ae4327
அதிகாரபூர்வ ‘வாட்ஸ்அப் வெப்’ இணையப் பக்கத்தைத் தேடிய பயனாளர்கள், சரிபார்க்கப்படாத ‘யுஆர்எல்’ இணைப்புகளைச் சொடுக்கியதால் மோசடிக்காரர்கள் அவர்களது கணக்குகளுக்குள் புகுந்தனர். - படம்: சாவ்பாவ்

நவம்பர் தொடக்கத்தில் இருந்து, போலி ‘வாட்ஸ்அப் வெப்’ பக்கங்கள் தொடர்பிலான மோசடிக்கு குறைந்தது 237 பேர் ஆளாகியுள்ளனர்.

அவர்கள் இழந்த மொத்த தொகை $606,000 எனக் காவல்துறை திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அதிகாரபூர்வ ‘வாட்ஸ்அப் வெப்’ இணையப் பக்கத்தைத் தேடிய பயனாளர்கள், சரிபார்க்கப்படாத ‘யுஆர்எல்’ இணைப்புகளைச் சொடுக்கினர். இதன் மூலம் பயனாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை மோசடிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

வாட்ஸ்அப் கணக்கு பயனாளர்களைப்போல ஆள்மாறாட்டம் செய்த மோசடிக்காரர்கள், கணக்கின் தொடர்புப் பட்டியலில் உள்ள பயனாளர்களின் குடும்பத்தார் அல்லது நண்பர்களைத் தொடர்புகொண்டு கடன் கேட்டனர்.

தங்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாக மோசடிக்காரர்கள் கோரினர். எடுத்துக்காட்டாக, மருத்துவ அவசரநிலை காரணமாக பணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் பணம் மாற்றுவதில் வரம்பு இருந்ததால் வங்கிக் கணக்குகள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் மோசடிக்காரர்கள் கூறினர்.

“தங்களுக்குப் பணம் எதுவும் கிடைக்கவில்லை எனக் குடும்பத்தார் அல்லது நண்பர்கள் சொன்ன பிறகே தாங்கள் மோசடிக்கு ஆளாகியிருப்பதைப் பாதிக்கப்பட்டவர்கள் உணர்ந்தனர்,” என்று காவல்துறை கூறியது.

வாட்ஸ்அப்பின் ஈரடுக்குப் பாதுகாப்பு அம்சத்தைச் செயல்பாட்டில் வைத்திருப்பது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்