தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏபெக் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் லீ அமெரிக்கா பயணம்

1 mins read
3f439866-985d-4600-b1c2-c5a9f67e865f
பிரதமர் லீ சியன் லூங் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

அமெரிக்காவுக்கு ஆறு நாள் பணிநிமித்தப் பயணமாகச் செல்லும் பிரதமர் லீ சியன் லூங் திங்கட்கிழமையன்று சான் ஃபிரான்சிஸ்கோ சென்றார்.

அவருடைய இந்தப் பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில் ஏபெக் எனப்படும் ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வார்.

உலகின் 21 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த மாநாடு ஏபெக்கின் 30வது மாநாடாகும். இதை அமெரிக்கா ஏற்று நடத்துவது இதுவே முதல் முறை.

மாநாட்டுக் கூட்டங்களுக்கு இடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஸி ஜின்பிங்கை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏபெக் மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்கள், வர்த்தகத்தை வலுப்படுத்துவது, விநியோகச் சங்கிலித் தொடர்பு மீள்திறன், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது ஆகியவற்றுடன் நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலம் போன்றவை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவர் என்று பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.

மாநாட்டுக்கு இடையே, பிரதமர் லீ மற்ற ஏபெக் மாநாட்டுத் தலைவர்களுடனும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அறிக்கை கூறியது.

அத்துடன், திரு லீ கலிஃபோர்னியா மாநில ஆளுநர் கேவின் நியூசம், அல்ஃபபெட் நிறுவனத் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை, ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் போன்ற முக்கிய அமெரிக்க நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்