கரையோரப் பூந்தோட்டங்கள் என்று அழைக்கப்படும் ‘கார்டன்ஸ் பை த பே’ தனிச்சிறப்புமிக்க உயரமான ஒளிரும் மரங்களும் இரு குளிர்ச்சியான குவிமாடங்களும் ஏராளமானவர்களை ஈர்த்து வருகிறது.
இந்த நிலையில், இது போதாது என்று இன்னும் சிறப்பு அம்சங்கள் அங்கு சேர்க்கப்படவிருக்கின்றன.
அந்த வகையில் 1.5 ஹெக்டர் நிலப் பரப்பில் அமையும் ‘கிஷ்பிஷர்’ சதுப்புநில தாவரங்களின் தோட்டம் புதிய அனுபவத்தைத் தரவிருக்கிறது.
அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்தால் இந்த அனுபவம் மூன்று ஆண்டுகளில் தயாராகிவிடும்.
அதில் மிகைமெய் (Augmented), மெய்நிகர் (virtual reality) தொழில்நுட்பங்களின் காட்சிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்று அக்டோபரில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் ‘கரையோரப் பூந்தோட்டங்கள்’ தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் லோ கூறினார்.
பத்து ஆண்டுகள் செயல்பாட்டுக்குப் பிறகு பலதரப்பட்ட கவர்ச்சி அம்சங்களைப் புகுத்தும் நோக்கத்தில் இம்முயற்சி இடம்பெறுவதாகவும் அவர் சொன்னார்.
கரையோரப் பூந்தோட்டங்கள் 2012ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
முதன் முதலாக இரண்டு அமைப்புகள் நிறுவப்படும். அதிலிருந்து திட்டமிடப்பட்டுள்ள புதிய அனுபவம் எப்படியிருக்கும் என்பதை பார்வையாளர்கள் ஊகிக்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
இந்த அமைப்புகள் கார்டன்ஸ் பை த பே எம்ஆர்டி நிலையத்துக்கு அருகே அமைகின்றன.
‘மோனட்ஸ் கார்டன்’ என்ற முதல் அமைப்பு, 2024ஆம் ஆண்டின் மத்தியில் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள ‘ஃபிளவர் டோம்’ குவிமாடத்திற்குள் இது அமைக்கப்படுகிறது.
இதில் இருக்கும் புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியரான மோனட்சின் கலைப் படைப்புகளும் பிரான்சின் கிவர்னியில் உள்ள அவரது தோட்டங்களின் மறுஉருவாக்கமும் புதிய கலை அனுபவத்தைத் தரும்.
குவிமாடத்திற்குள் அமையும் மலர் பூந்தோட்டத்தில் பார்வையாளர்கள் மின்னிலக்க அனுபவங்கள் மூலம் மோனட்சின் உலகத்திற்குள் நுழையலாம்.
அங்கு, மோனட்சின் அழியாத படைப்புகளும், சின்னங்களும் உயிர்பெறுவதை நேரில் பார்க்கலாம் என்று திரு லோ குறிப்பிட்டார்.
இரண்டாவது அமைப்பு, கிளவுட் ஃபாரஸ்ட் குவிமாடத்திற்குள் அமைக்கப்படுகிறது. மோனட்சின் ஓவியங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
2022 அக்டோபர் முதல் ‘கிளவுட் ஃபாரஸ்ட்’ அவதார் அடிப்படையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஜனவரி வரை நீடிக்கும். பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை இங்கு ‘நேஷனல் ஜியோகிரபிக்’ கண்காட்சி நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
இரண்டு இடங்களும் புதிய அனுபவத்துடன் பார்வையாளர்களின் கல்விப் பயணமாக ஏப்ரலுக்குப் பிறகு மாற்றப்படும் என்று திரு லோ தெரிவித்தார்.