உள்ளூர் குறைகூறலுக்குப் பிறகு ஆசிய வர்த்தக உடன்பாட்டை ஒத்திவைத்த அமெரிக்கா

உள்ளூர் குறைகூறலுக்குப் பிறகு ஆசிய வர்த்தக உடன்பாட்டை ஒத்திவைத்த அமெரிக்கா

3 mins read
b05168dd-0e9a-4b1b-b3dd-208298c33442
ஐபெஃப் எனப்படும் வளப்பத்துக்கான இந்தோ-பசிபிக் பொருளியல் கட்டமைப்பு உடன்பாட்டின் அம்சங்கள் இன்னும் முழுமைப் பெறவில்லை என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனட் யெல்லன் கூறியுள்ளார். - படம்: இபிஏ

சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையே சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் ஓர் உச்சநிலைச் சந்திப்பின்போது கையெழுத்தாகவிருந்த வர்த்தக உடன்பாட்டுக்கு அமெரிக்காவில் குறை கூறல்கள் எழுந்த பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் அந்த உடன்பாடு கையெழுத்தாவதை ஒத்திவைக்கலாம் என்ற அறிகுறி எழுந்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் ஏபெக் எனப்படும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளும் 20 நாடுகளின் தலைவர்களை அதிபர் பைடன் வரவேற்றார்.

அந்த நிகழ்வின் போது திரு பைடன், சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்திப்பார். அப்போது இருநாடுகளுக்கிடையே தற்காலிகமாக நின்றுபோயிருக்கும் வர்த்தக உடன்பாடுகள் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அந்த உடன்பாட்டின் ஒரு பகுதியான ஐபெஃப் எனப்படும் வளப்பத்துக்கான இந்தோ-பசிபிக் பொருளியல் கட்டமைப்பு தொடர்பான முக்கியமான அம்சங்கள் இன்னும் நிறைவுபெறவில்லை என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனட் யெல்லன் தெரிவித்துள்ளார்.

“உடன்பாட்டின் அம்சங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி உள்ளது. ஆனால் அது முழுமைப் பெறவில்லை. அதற்கு இன்னும் சில வேலைகள் உள்ளன,” என்று திருவாட்டி யெல்லன் ஏபெக் நிதி அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

“இருப்பினும், உடன்பாட்டில் உள்ள சில அம்சங்கள் அமெரிக்காவுக்கு முக்கிய பலன்கள் தரும் என்று நினைக்கிறேன். உதாரணத்துக்கு, விநியோகச் சங்கிலிகள், சுற்றுப்புறம், நிலையான நிதி ஆகியவற்றில் நாங்கள் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளோம். வர்த்தகத்திலும் வளர்ச்சி சிறப்பாக உள்ளது, ஆனால் அது முழுமைப் பெறவில்லை,” என்றும் அவர் மேலும் கூறினார்.

ஐபெஃப் உடன்பாட்டில் பாரம்பரிய வர்த்தக ஒப்பந்தம் இல்லை என்றும் அதில் வர்த்தக அனுகூலமும் இல்லாதது ஒரு குறையாகப் பார்க்கப்படுகிறது.

இருப்பினும், அந்த உடன்பாடு, உலகின் ஐந்து முக்கிய பொருளியல்களில் மூன்றான அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உட்பட உலகளாவிய பொருளியலின் 40 விழுக்காட்டு வர்த்தகத்துக்கு தரநிலைகளை வகுக்க இலக்கு கொண்டுள்ளது.

ஐபெஃப் உடன்பாட்டில் ஆஸ்திரேலியா, தென்கொரியா, தென்கிழக்காசியாவின் பெரும்பாலான நாடுகள் உள்ள நிலையில் சீனாவின் பெயர் அதில் இடம்பெறவில்லை. இது ஆசியாவில் தலைமைத்துவ பங்களிக்க அமெரிக்கா விரும்புவதைப் புலப்படுத்துகிறது.

தொழிற்சங்கங்களுடன் அணுக்க தொடர்பில் உள்ள திரு பைடனின் ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ஷெரோட் ப்ரவுன், உச்சநிலைக் கூட்டம் நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன், ஐபெஃப் உடன்பாட்டிலிருந்து வர்த்தக அம்சத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார்.

“செயல்படுத்தக்கூடிய தொழிலாளர் தரநிலைகள் இல்லாத எந்தவொரு வர்த்தக உடன்பாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று திரு ப்ரவுன் கூறினார்.

செனட் சபையில் ஜனநாயகக் கட்சிக்கு சிறிய அளவுக்கு பெரும்பான்மையே உள்ளது. அதன் உறுப்பினர்களில் சிலர் ஐபெஃப் உடன்பாடு, டிரான்ஸ்-பசிபிக் பங்காளித்துவ உடன்பாட்டின் மறு பிரதிபலிப்பே என்று அச்சம் தெரிவித்தனர். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஆசிய நட்பு நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம்தான் டிரான்ஸ்-பசிபிக் பங்காளித்துவ உடன்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், 2017ல் அதிபர் பதவிக்கு வந்த டோனால்டு டிரம்ப், அந்த உடன்பாட்டில் அமெரிக்க ஊழியர்களின் நலன்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன என்று காரணம் காட்டி அதை ரத்து செய்தார்.

குறிப்புச் சொற்கள்